logo
விவசாயிகள் மேம்பாட்டிற்காகத்தான் வேளாண் சட்டம்: பிரதமர் மோடி பேச்சு

விவசாயிகள் மேம்பாட்டிற்காகத்தான் வேளாண் சட்டம்: பிரதமர் மோடி பேச்சு

13/Dec/2020 06:26:10

புதுதில்லி- டிச: விவசாயிகளின் மேம்பாட்டிற்காக தான் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் 93-ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்திலும், வருடாந்திர மாநாட்டிலும், பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

20-–20 போட்டியில் நிறைய விஷயங்கள் வேகமாக மாறுவதைக் கண்டோம். ஆனால் 2020 அனைவரையும் குழப்பியது. இந்தியாவும், ஒட்டு மொத்த உலகமும் நிறைய ஏற்ற தாழ்வுகளைக் கண்டன. சில வருடங்கள் கழித்து கொரோனா காலத்தைப் பற்றி நாம் நினைக்கும் போது, ஒருவேளை நாம் அதை நம்ப முடியாது. விஷயங்கள் விரைவாக மேம்படுவது நல்லது.

பிப்ரவரி – -மார்ச் மாதங்களில் தொற்றுநோய் தொடங்கியபோது, நாங்கள் அறியப்படாத எதிரிக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தோம். நிறைய நிச்சயமற்ற நிலைகள் இருந்தன. அது உற்பத்தி, தளவாடங்கள், பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி என்று பல சிக்கல்கள் இருந்தன. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதுதான் கேள்வியாக இருந்தது.

நம்பிக்கை:  டிசம்பர் மாதத்திற்குள் நிலைமை மாறிவிட்டது. எங்களிடம் தற்போது இதற்கான தெளிவான பதில்கள் உள்ளன. இன்றைய பொருளாதார குறியீடுகள் நம்பிக்கை அளிக்கிறது.

நெருக்கடியின் போது தேசம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதிர்காலத் தீர்மானங்களை மேலும் வலுப்படுத்தி உள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் உலகம் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கை, கடந்த சில மாதங்களில் மேலும் வலுப்பெற்றது. இந்தியாவில் அதிகளவு நேரடி அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. அது தொடர்ந்து வருகிறது. தன்னிறைவு இந்தியா திட்டம், அனைத்து துறைகளையும் ஊக்குவிக்கிறது.

விவசாயிகள் மேம்பாட்டிற்காகவேளாண் சட்டம்

விவசாய துறைக்கும், விவசாய உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், கிடங்கு, குளிர்பதன வசதிகள் என மற்ற துறைக்கும் இடையே மிகப்பெரிய தடை இருந்தது. இந்த தடை தற்போது அகற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிறகு, விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளும், தொழில்நுட்ப பலன்களும் கிடைக்கும். குளிர்பதன சேமிப்பிற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் விவசாயத்துறையில் அதிக முதலீடு கிடைக்கும்.

இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். விவசாயிகள் மேம்பாட்டிற்காக வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த மாநாடு  ஞாயிறு, திங்கள் கிழமைகளிலும்  நடைபெறுகிறது. பொருளாதாரத்தின் மீது கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், அரசால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், இந்திய பொருளாதாரத்திற்கான வருங்கால பாதை குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

Top