logo
டைம் இதழில் இடம்பிடித்த  15 வயது இந்திய வம்சாவளி சிறுமி

டைம் இதழில் இடம்பிடித்த 15 வயது இந்திய வம்சாவளி சிறுமி

06/Dec/2020 02:20:15

வாஷிங்டன்: அமெரிக்காவின் டைம் இதழ் 2020-ஆம் ஆண்டின் சிறந்த குழந்தையாக, சில கண்டுபிடிப்புகளை உருவாக்கிய இந்திய வம்சாவளியான 15 வயது சிறுமியை தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது.

அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை கவுரவிக்கும் வகையில் அவர்களின் படங்களை தனது இதழில் வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. Kid of the year என்ற பட்டத்தை முதன்முறையாக டைம் இதழ் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இளம் விஞ்ஞானியாக அறியப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயதான கீதாஞ்சலி ராவுக்கு Kid of the year என்ற பட்டத்தை வழங்கி அட்டைப்படத்திலும் அவரை இடம்பெறச் செய்து கவுரவித்து உள்ளது.

கீதாஞ்சலி ராவ். அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் உருவாக்கிய கைன்ட்லி’ என்ற செல்போன் செயலி ஆன்லைன் துன்புறுத்தல்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து செல்போனை உபயோகிப்பவர்களை எச்சரிக்கும் திறன் கொண்டது.

டெத்திஸ் என்ற பெயரில் இவர் உருவாக்கிய கருவி, நீரில் கலந்துள்ள மாசு தன்மை குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது. மேலும்,போதைப் பொருளுக்கு எதிரான பிரசாரம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் குறித்தும் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில்தான் டைம் இதழ் அவரை 2020-ஆம் ஆண்டின் சிறந்த குழந்தையாகத் தேர்வு செய்து கவுரவித்து உள்ளது.

இதுகுறித்து கீதாஞ்சலி ராவ் பூரிப்புடன் கூறுகையில், நான் சில கண்டுபிடிப்புகளை உருவாக்கி உள்ளேன். என்னால் இதை செய்ய முடியும்போது யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நம்மால் உருவாகாத சில பிரச்சினைகளையும் நாம் தீர்க்க வேண்டும். பருவநிலை மாற்றம், சைபர் புல்லிங் போன்ற பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டும். இவ்வாறு கீதாஞ்சலி ராவ் கூறினார்.

Top