logo
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்..?

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்..?

06/Mar/2021 06:32:07


தமிழக பாஜக சார்பில் சட்டப்பேரவைக்கு 20  தொகுதிகளில் போட்டியிடும்   உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.


தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது.எனவே, வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக தலைமையில் இருபெரும் கூட்டணிகள் அமைந்துள்ளன. 

இதில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று (5.3.2021) கையெழுத்தானது.

முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் 20 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் யார், யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான உத்தேச பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை, நடிகை கவுதமி, சமீபத்தில் கட்சியில் சேர்ந்த குஷ்பூ, கட்சியின் முக்கிய தலைவர்களாக இருக்கும் வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன், கே.டி.ராகவன் உள்ளிட்டோருக்கு சீட் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலே இறுதி செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 கிணத்துக்கடவு - அண்ணாமலை.கோவை தெற்கு - வானதி சீனிவாசன். நாமக்கல்(ராசிபுரம்) - எல்.முருகன். ஆத்தூர் - டாக்டர் பிரேம் துரைசாமி. மைலாப்பூர் - கே.டி.ராகவன். காரைக்குடி - ஹெச்.ராஜா. சேப்பாக்கம் - குஷ்பு. வே ளச்சேரி - டால்பின் ஸ்ரீதர். காஞ்சிபுரம் - கேசவன். திருத்தணி - சக்கரவர்த்தி. பழனி - கார்வேந்தன்.சிதம்பரம் - ஏழுமலை. திருவாரூர் - கருப்பு முருகானந்தம். திருவண்ணாமலை - தணிகைவேல்.  வேலூர் - கார்த்தியாயினி.  ஒசூர் - நரேந்திரன். தூத்துக்குடி - சிவமுருக ஆதித்தன். நெல்லை - நயினார் நாகேந்திரன். ராஜபாளையம் - நடிகை கவுதமி. துறைமுகம் - வினோஜ் செல்வம்.

கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 2.22 சதவீத வாக்குகளும், 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 2.8 சதவீத வாக்குகளும் கிடைத்தன. கடந்த முறை தனித்து களம் கண்ட பாஜக, இம்முறை அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது. எனவே அதிமுகவின் வாக்கு வங்கி எந்தளவிற்கு பாஜகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும். 

 


Top