logo
காவரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் பெயர்கள் வரலாற்றில்  நிலைத்து நிற்கும்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

காவரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் பெயர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கும்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

29/Nov/2020 02:09:49

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தனியார் மண்டபத்தில்  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில்  காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தாமாக முன்வந்து நிலம் வழங்கிய நில உரிமையாளர்களைப்  பாராட்டி  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  சி. விஜயபாஸ்கர் சான்றிதழ்களை அளித்தார்.

இதைத்தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு  அவர் அளித்த பேட்டி:புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவுத்திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தாயுள்ளத்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்.  இத்திட்டத்தின்  முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள இந்த நிதியாண்டிலேயே ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கான நிலம் சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் சுமூகமான முறையில் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 17,000 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்திற்காக தாமாக முன்வந்து நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு  பொன்னாடை அணிவித்து , மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

 இத்திட்டம், விராலிமலை குன்னத்தூரில்  தொடங்கி  லெட்சுமணம்பட்டி, மாத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளின் வழியாக கவிநாடு கண்மாயை சென்றடைகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரூ.331 கோடி மதிப்பீட்டில் கால்வாய் வெட்டும் பணிக்காக டெண்டர் விடப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக   வரும் ஜனவரி மாதம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நேரடியாக வருகை தந்து இத்திட்டத்தை  துவக்கி வைக்க உள்ளார்.  இதன் மூலம்  நூறாண்டு கனவுத்திட்டமான  காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேறுவது உறுதியாகியுள்ளது.

 குன்னத்தூரில் மட்டும் இத்திட்டத்திற்கு 36 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. இது வரை 20 ஹெக்டர் நிலத்தை விவசாயிகள், விவசாயிகள் அல்லாத நிலஉரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வழங்கியுள்ளார்கள். 122 நபர்களில் 63 பேர்  தாமாக முன்வந்து நிலம் வழங்கி உள்ளனர். பார்வதி என்பவரது குடும்பத்தினர் மட்டும் இத்திட்டத்திற்கு 19 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார்கள். தற்பொழுது இத்திட்டத்திற்கு நிலம் வழங்கிய அனைவருக்கும்  அடுத்த  இரண்டு வாரத்தில் 300 சதவீதம் இரண்டரை மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையுடன் 25 சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல தலைமுறையினரும் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட உள்ள காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டத்திற்கு தாமாக முன்வந்து நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் பெயர்கள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்  ரம்யாதேவி, கண்காணிப்பு பொறியாளர் (நடுக்காவிரி வடிநில வட்டம்) திருவேட்டைசெல்லம், வருவாய் கோட்டாட்சியர்  டெய்சிகுமார், வேளாண் இணை இயக்குநர் (பொ) பெரியசாமி, விவசாயிகள்; விவசாய  சங்கப்பிரதிநிதிகள்  பலர் கலந்து கொண்டனர்.

  


Top