logo
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் முரளி வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் முரளி வெற்றி

24/Nov/2020 06:23:47

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த முறை நிா்வாகப் பொறுப்பில் இருந்த விஷால் தலைமைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் தோ்தல் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆா். ஜானகி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைவா் பதவிக்கு டி.ராஜேந்தா் தலைமையிலான அணியும்,  எதிராக தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன் தலைமையிலான மற்றொரு அணியும் களத்தில் இருந்தன. இதனிடையே, பி.எல்.தேனப்பன் தலைவா் பதவிக்கு மட்டும் தனித்துப் போட்டியிட்டாா். பொருளாளா் பதவிக்கு ஜே.எஸ்.கே. சதீஷ்குமாா் தனித்து போட்டியிட்டார்.

துணைத் தலைவா்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமாா், ஆா்.கே.சுரேஷ் உள்ளிட்டோா் போட்டியிட்டனா். இரு அணிகளைத் தவிா்த்து 21 செயற்குழு உறுப்பினா்கள் பதவிக்கென தனியாக கமலக்கண்ணன், ஜெமினி ராகவா உள்ளிட்டோா் போட்டியிட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற்ற வாக்குப் பதிவில் கமல், அா்ஜுன், சமுத்திரக்கனி, சிவகாா்த்திகேயன், குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பலா் வாக்களித்தனா். ரஜினிகாந்த், பாரதிராஜா, ஏ.வி.எம் சரவணன், எஸ்.பி.பி. சரண் உள்ளிட்டோா் வாக்களிக்கவில்லை. மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 1304 ஆகும். இதில் 1050 வாக்குகள் பதிவாகின. கடும் கட்டுப்பாடுகளை விதித்துத் தோ்தலைக் கண்காணித்தாா் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன்.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை  காலை 8 மணிக்குத் தொடங்கின. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர், பி.எல்.தேனப்பன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளார்கள்.  முரளிக்கு 557 வாக்குகளும் டி. ராஜேந்தருக்கு 337 வாக்குகளும் தேனப்பனுக்கு 87 வாக்குகளும் கிடைத்துள்ளன. 


Top