logo
கொடுமுடி அருகே நள்ளிரவில் சி.சி.டி.வி கேமராவை உடைத்து தர்கா உண்டியல் பணத்தை திருட முயற்சி

கொடுமுடி அருகே நள்ளிரவில் சி.சி.டி.வி கேமராவை உடைத்து தர்கா உண்டியல் பணத்தை திருட முயற்சி

17/Nov/2020 08:14:08

கொடுமுடி: ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள  காசி பாளையத்தில் ஹஜ்ரத் முஹம்மது மீரான் இரட்டுப்பை மஸ்தான் ஒளி உல்லா என்கிற  50 வருட பழமையான தர்கா உள்ளது.இந்த தர்காவில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் தர்காவின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளார். உள்ளே உள்ள உண்டியலின்  பூட்டை உடைத்து பணம் எடுக்க முயன்றுள்ளார்.  அந்த நபரால் உண்டியலை  திறக்க முடியவில்லை.   இந்த ஆத்திரத்தில் தர்காவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை உடைத்து சேதப்படுத்தி அருகில் உள்ள இடத்தில் தூக்கி எறிந்து சென்று விட்டார்.

இன்று(17.11.2020) காலை அந்த பகுதியாக வந்த பொதுமக்கள் தர்காவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  தர்காவில் உள்ள உண்டியல் பணம் கொள்ளை போகவில்லை. தர்காவின் அருகே உள்ள  ஒரு காலி இடத்தில் சி.சி.டி.வி கேமரா உடைக்கப்பட்டு இருந்தது.  அதிலிருந்த சிப்பை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த உண்டியலில் உள்ள  பணத்தை கடந்த வியாழக்கிழமை தான் நிர்வாகத்தினர் எடுத்துள்ளனர். இதனால் இந்த  உண்டியலில் இப்போது அதிக அளவு பணம் இல்லை என்றனர். மேலும் கொள்ளை  முயற்சி நடந்த இந்த தர்காவில் ஏற்கனவே 6 முறை உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது. இதை அடுத்து தான் இந்த தர்காவில் சி.சி.டி .வி கேமரா பொருத்தப்பட்டது.இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Top