logo
ஈரோடு மாவட்டத்தில் இன்று திரையரங்குகள் திறப்பு.. ஆனால்.. படங்கள் திரையிடப்படவில்லை

ஈரோடு மாவட்டத்தில் இன்று திரையரங்குகள் திறப்பு.. ஆனால்.. படங்கள் திரையிடப்படவில்லை

10/Nov/2020 06:56:13

ஈரோடு:கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைய தொடங்கி உள்ளதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று(10.11.2020) முதல்  திரையரங்குகளைத் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக அரசு பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்படவேண்டும் முக கவசம் அணிந்து வரவேண்டும், உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் திரையரங்குக்கு வரும் மக்களுக்கு தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். திரையரங்க நுழைவாயில் கையில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதையொட்டி திரையரங்குகளைத் திறக்க  முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 35 திரையரங்குகள் மாவட்டம் முழுவதும் உள்ளன இதில் மாநகர் பகுதியில் 11 திரையரங்குகள்  உள்ளன. இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால் புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் பழைய படங்களை திரையிட உரிமையாளர்கள் தயங்கி வருகின்றனர். பழைய படங்களை திரையிட்டால் மக்கள் கூட்டம் வராத காரணத்தால் (1.11.2020) இன்று மாவட்டம் முழுவதும்  எந்த திரையரங்கிலும் படங்கள் திரையிடப்படவில்லை.  ஈரோடு மேட்டூர் சாலையிலுள்ள அபிராமி திரையரங்கில்  காலையில் கோ பூஜை செய்யப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில்நாதன் கூறியதாவது: அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழி நெறிமுறைகள் உடன் இன்று மாவட்டம் முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.  மேலும், விபிஎப் கட்டணம் செலுத்துவதில் நீடித்துவரும் பிரச்னை காரணமாக புது படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. பழைய படங்களை திரையிடலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய திரைப்படங்களை திரையிட்டால் மக்கள் கூட்டம் வர வாய்ப்பு இல்லை. இதனால் இன்று(நவ.10) நாங்கள் எந்தப் படங்களையும் திரையிட வில்லை. தீபாவளிக்கு கண்டிப்பாக புது படங்கள் வர வாய்ப்புள்ளது . அதற்காகக் காத்திருக்கிறோம் என்றார். 


Top