logo
தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி: மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் பேச்சு

தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி: மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் பேச்சு

03/Nov/2020 10:18:44

புதுக்கோட்டை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் சஞ்சய் தத்.

புதுக்கோட்டையில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று(3.11.2020) நடைபெற்றது இதில், மாவட்டத்தலைவர்(வடக்கு) வி. முருகேசன், தெற்கு மாவட்டத்தலைவர் தர்ம. தங்கவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். 

முன்னாள் எம்எல்ஏக்கள் டி. புஷ்பராஜ், ராம.சுப்புராம், மாநில பொதுச்செயலர் ஏ. சந்திரசேகரன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் துரை.திவியநாதன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஆரோக்கியசாமி, எம்.ஏ.எம். தீண், என்.சி. ராதாகிருஷ்ணன்,  மாநிலச்செயற்குழு உறுப்பினர் ஜி.எஸ்.தனபதி, துணைத்தலைவர் ஏ.எம்.எஸ்.இப்ராஹிம்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான சஞ்சய்தத் கலந்துகொண்டார். அதில், அவர் பேசியதாவது: இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் மசோதாக்களை சட்டமாக்க்கூடாது கைவிட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதையெல்லாம் மீறி, தான்தோன்றித்தனமாக மத்திய பாஜக அரசு சட்டமாக்கிவிட்டது. இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டுமென நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. அச்சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்.

பீகாரில் 15 ஆண்டுகாலம் அம்மாநில மக்களை ஏமாற்றி வந்த நிதீஷ்குமாரின் ஆட்சி இந்தத்தேர்தலுடன்  முடிவுக்கு வந்துவிடும். அங்கு காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். மக்கள் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரத்தயாராகிவிட்டனர் என்பதை  பீகார் தேர்தல்  முடிவுகள் வெளிப்படுத்தும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணி மிகவும் பலமான கூட்டணியாகத்திகழ்கிறது.  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப்பிடிப்பது உறுதி.  அதிமுக அரசைப் பொருத்தவரை எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை உள்ளது. மக்கள் வெறுப்புடன் கொதித்துப் போய் இருக்கின்றனர். இபிஎஸ்-ஓபிஎஸ்- ஆகிய இருவருக்கும் துணிச்சல் கிடையாது.

 தில்லியிலிருந்து மோடியும், அமித்ஷா ஆகியோரது பாட்டுக்கு இங்கு ஆடிக்கொண்டிருக் கின்றனர். இந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களை அடுத்ததாக அமையும் திமுக- காங்கிரஸ் ஆட்சியில் வெளிக்கொணர்ந்து நடவடிக்கை எடுப்போம். யாரும் தப்ப முடியாது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை சோனியா, ராகுல் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர். கட்சித்தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அந்தத்தலைமையை ஏற்று நடப்போம் என்றார் சஞ்சய் தத்.

கூட்டத்தில், வட்டாரத்தலைவர்கள் பழனிச்சாமி, மகாதேவன், செல்வராஜ், ராமையா, மாயக்கண்ணு, முருகேசன், ராமமூர்த்தி, எஸ்.எஸ்டி. பிரிவு மாநில துணைத்தலைவர் கண்ணன், வட்டார துணைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத்தலைவர் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பொன்னமாரவதி நகரத்தலைவர் எஸ். பழனியப்பன், நகரப் பொருளர் ஆசிரியர் பால்ச்சாமி, மாவட்டச்செயலர்கள் சரவணபவன் மணி, ஆர். பாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எல். ஜீவானந்தம், வட்டார இளைஞர் காங்கிரஸ் எஸ். சுப்பையா உள்பட நூற்றும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்கு வாதம்: 

திமுக கூட்டணியில் நமக்கு மரியாதை இல்லை என்று கூறி  நிர்வாகிகள்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திமுக கூட்டணியை நாம் வெற்றிபெற செய்தாலும் நமக்கு உரிய மரியாதை அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றிருந்தும், திமுக நமக்கு உரிய மரியாதையை அங்கீகாரத்தை கொடுக்காததால் தற்போது அந்த இடம் அதிமுகவிற்கு போய்விட்டது.

இதுபோன்று திமுக கூட்டணியை நாம் வெற்றிபெற செய்தாலும் அதற்குண்டான அங்கீகாரம் நமக்கு கடந்த காலங்களில் கிடைக்கவில்லை. வரும் காலங்களில் நமக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேலிடம் எடுக்க வேண்டும் என்று கூறி சஞ்சய்தத்யிடம்  காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து  அவர்களை சமாதானப்படுத்தி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர் 

Top