logo
பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்த மக்கள்

பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்த மக்கள்

14/Jan/2021 06:40:52

புதுக்கோட்டையில் பல்வேறு கோவில்களின் முன்பாகவும் மற்றும் வீடுகளிலும் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை  நகரிலுள்ள தண்டாயுதபாணி கோயில் ஆலயத்தில் பெண்கள் புதுமண்பானையில் பொங்கல் வைத்து இறைவனை வழிபட்டனர்.

இதேபோன்று  தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இவ்வுலகில் உயிர்கள் வாழ ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு படையலிட்டு, இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.

பொங்கலையொட்டி வீடுகள் முன் அலங்காரத் தோரணங்களைக் கட்டி, வண்ண நிறங்களில் கோலமிட்ட மக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக வரவேற்றனர். புத்தாடை உடுத்தி‌, மதம், இன பேதமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ந்து வருகின்றனர்.

இதேபோல் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு  போட்டிகளுடன் பொங்கல் விழாக்கள் நடைபெறுகின்றன. பொது வெளியில் மக்கள் ஒன்றுசேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இந்த திருவிழாக்கள், சமத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதாக உள்ளன.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.


Top