logo
ஆலங்குடி அருகே குப்பையில்  கட்டுக்கட்டாக மருத்துவ காப்பீட்டு அட்டைகள்: பொதுமக்கள் அதிர்ச்சி.

ஆலங்குடி அருகே குப்பையில் கட்டுக்கட்டாக மருத்துவ காப்பீட்டு அட்டைகள்: பொதுமக்கள் அதிர்ச்சி.

01/May/2020 07:14:22

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், அந்த கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தின் ஓரத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில்  மருத்துவ காப்பீடு அட்டைகள் கட்டுகட்டாக வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


கடந்த 2011ஆம் ஆண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், விவசாய குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை விநியோகம் செய்யப்பட்டது. வருவாய்த் துறையின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் அனைத்து கிராமங்களை சேர்ந்த பயனாளிகளுக்கும் இந்த மருத்துவ காப்பீட்டு அட்டை விநியோகம் செய்யப்பட்டன. 

இந்நிலையில்,  ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் எல்என்புரம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆண்டவராயபுரம் கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப மக்களுக்கு மட்டும் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படாமல் இருந்துள்ளது.

மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கக் கோரி பலமுறை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், அவர்களுக்கான மருத்துவ அட்டை இதுவரையில் கிடைக்கவில்லை.



மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாததால் அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர்  அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், 3 பேர் பணவசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 கடந்த  9 ஆண்டுகளாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில்,  ஆண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள பழனிவேல் என்பவரது தோட்டத்தை உழவு செய்தபோது தோட்டத்தின் ஓரத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பையில் கட்டுக்கட்டாக அப்பகுதியை சேர்ந்த  மக்களின் மருத்துவ காப்பீடு அட்டை கிடந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தோட்டத்தின் உரிமையாளர் அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்த போது தோட்டத்தின் ஓரத்தில் மண்ணிற்குள்ளும் பலரது மருத்துவ காப்பீடு அட்டை புதைந்து கிடப்பது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அளித்த  தகவலைத் தொடர்ந்து, ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.

9 ஆண்டுகாலமாக மருத்துவ காப்பீடு அட்டை இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்த நிலையில் பயனாளிகளுக்கு வழங்கி இருக்க வேண்டிய மருத்துவ காப்பீட்டு அட்டையை குப்பைகளில் வீசிச் சென்ற அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து அப்பகுதியினர் கூறியது: தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக கடந்த 2009ஆம் ஆண்டு தங்கள் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்திருந்தனர், பின் 2011-ஆம் ஆண்டு மற்ற கிராம மக்களுக்கெல்லாம் மருத்துவ காப்பீடு அட்டை விநியோகம் செய்யப்பட்டது.ஆனால் தங்களுக்கு மட்டும் மருத்துவ காப்பீட்டு அட்டை விநியோகம் செய்யப்படவில்லை. அப்போதே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வரவில்லை வந்ததும் தருகிறோம் என்று அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். ஆனால், தற்போது குப்பைமேட்டில் கட்டுக்கட்டாக தங்களது மருத்துவ காப்பீடு அட்டை கண்டெடுக்கப்பட்டு இருப்பது வேதனையாக உள்ளது.

மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எங்கள் கிராமத்தை சேர்ந்த பலர் வறுமை நிலையிலும்,  முழு தொகையையும் செலுத்தி விட்டு தான் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சிலர் போதிய பணம் இன்றி உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளனர்.இந்த மருத்துவ காப்பீட்டு அட்டையை அப்போதே வழங்கியிருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை அளித்து இருக்கலாம்.

உயிர் காக்க உதவுவதற்காக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ காப்பீட்டு அட்டையை குப்பையில் வீசிச்சென்ற அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Top