logo
தமிழ் நாட்டில் பள்ளிகள்- கல்லூரிகள் வரும் 16-ஆம் தேதி முதல் திறப்பு..!  முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

தமிழ் நாட்டில் பள்ளிகள்- கல்லூரிகள் வரும் 16-ஆம் தேதி முதல் திறப்பு..! முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

01/Nov/2020 11:01:45

இது குறித்து அவர் வெளியிட்ட கருத்து: பள்ளிகளைப் பொறுத்த மட்டில் 9,10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் செயல்படத்துவங்கும். இப்படியோர் அறிவிப்பை தமிழக முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி நேற்று மாலை வெளியிட்டிருக்கின்றார்.

இதில் வேதனை கலந்த வேடிக்கை என்னவென்றால், நேற்றுக் காலையில் கோபியில் பேட்டி அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிகளைத் திறக்க இப்போது சாத்தியமில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். 

காலையில் சாத்தியமில்லை என கல்வித் துறை அமைச்சர் சொல்லி சில மணி நேரங்களிலேயே பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பது விநோதமான விஷயம் மாத்திரமல்ல.  செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறைக்குரிய அமைச்சர் மட்டுமல்ல; அமைச்சரவையில் மூத்த அமைச்சரும்கூட. அவருக்கே தெரியாமல் முடிவுகள் தலைமைச் செயலகத்தில் எடுக்கப்பட்டு அறிவிப்பாக வருகிறதென்றால், ஒவ்வொரு கட்டத்திலும் கல்வித்துறையில் விடுக்கப்படும் மாறுபாடான அறிக்கைகளுக்கும், அதனால் விளைந்த குழப்பங்களுக்கும் பின்னணியில் இருந்திருக்ககூடிய காரணங்களை இப்போது ஒருவாறு யூகிக்க முடிகின்றது.

அரசியல் காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், மாணவர்களின் படிப்போடும், அவர்கள் உடல் நலத்தோடும் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவற்ற நிலையை, ஒரு முக்கியமான துறையில் அதிலும் ஒரு முக்கிய காலக் கட்டத்தில் நீட்டிக்கச் செய்வது நாட்டிற்கு நல்லதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

Top