logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதார துறையினர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதார துறையினர் தகவல்

21/Mar/2021 08:14:32

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தகவல் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டதையடுத்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர்,மாநகராட்சி ஆகியோர் ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

 அதன்படி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தினமும் 2 ஆயிரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் நோய் பாதித்தவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோய்களின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எவ்வித அறிகுறியும் இன்றி நோய்த் தொற்றால் பாதித்தவர்களுக்கு வீடுகளில் தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதில், ஏராளமானவர்கள் நோய் தொற்றிலிருந்து குணம் அடைந்தனர்.இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. தொடர்ந்து தினமும் 1000 முதல் 1200 வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித் துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா  தினசரி பரிசோதனை அதிகரிக்க தொடங் கியுள்ளது. தற்போது மீண்டும் தினமும் 2,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, ஈரோடு மாவட்டம் முழுவதும் 4லட்சத்து 14 ஆயிரத்து 663 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

இதில் நேற்று ஒரு நாள் மட்டும் மாவட்டம் முழுவதும் 1980 பேருக்கு கொரோனா பரிசோத னை செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்

Top