logo
நவ.26 -இல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம், மறியல்: ஈரோட்டில்அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் ஆலோசனை

நவ.26 -இல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம், மறியல்: ஈரோட்டில்அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் ஆலோசனை

26/Oct/2020 06:51:54

ஈரோடு மாவட்டத்தில் நவ.26 -வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட திட்டமிடுவதற்காக அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்  (24-10-2020)  ஈரோட்டில் ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில் ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரியான சம்மேளனங்களின் தேசிய மாநாட்டு முடிவுகளையும், அனைத்து தொழிற்சங்கங்களின் மாநில நிர்வாகிகள் கூட்ட முடிவுகளையும் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி விளக்கிப் பேசினார்.

பொதுவேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்ய மேற்கொள்ள வேண்டிய தயாரிப்பு நடவடிக்கைகள் பற்றி சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் ஏஐடியுசி சார்பில் டி.ஏ.செல்வம், எஸ்.டி.பிரபாகரன், வி.செல்வராஜன், எம்.குணசேகரன், சிஐடியு சார்பில்  எச்.சிரீராம், பொன்.பாரதி, எல்பிஎப் சார்பில் ஜி.ரவிச்சந்திரன், எஸ்.கோபால், ஆர்.சுப்பிரமணியம்,  எச்எம்எஸ் சார்பில் டி.எம்.குமாரசாமி, பி.கார்த்திகா எம்எல்எப் சார்பில் ஜே.எபினேசர், எல்டியுசி சார்பில் ஏ.கோவிந்தராஜ், கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தோழர் சி.எம்.துளசிமணி,  ஏஐபிஈஏ சார்பில் தோழர்கள் பி.வி.சிரீதரன், இரா.நரசிம்மன், எஸ்.சூரியநாராயணன், எம்.ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, அண்மையில் மறைந்த எல்பிஎப் ஈரோடு மாவட்டச் செயலாளரும், மூத்த தொழிற்சங்கத் தலைவருமான ஜோ.சுந்தரம் மறைவுக்கு கூட்டம் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

விரிவான விவாதங்களுக்குப் பின்னர் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

மத்திய அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்கள், தொழிலாளர்கள் விரோத சட்டத் தொகுப்புகள், மின்சாரத் திருத்தச் சட்டம், மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, புதிய கல்விக் கொள்கை, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோத, மக்கள் விரோத, தேச விரோத, நடவடிக்கைகளைக் கண்டித்தும், அவற்றைக் கைவிடவும், திரும்பப்பெறவும் வலியுறுத்தியும், வருமானவரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும்.

 ஒரு நபருக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ஆண்டுக்கு 200 நாள் வேலையாக உயர்த்தி, நகரங்களுக்கும் விரிவுபடுத்தி, கூலியை அதிகரிக்க வேண்டும்.

அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2020 நவம்பர் 26 அன்று நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையும், மறியல் போராட்டத் தையும், அதற்கான தயாரிப்பு  இயக்கங்களையும் ஈரோடு மாவட்டத்தில் முழு வெற்றி பெறச் செய்வதென்று  கூட்டம் தீர்மானித்தது. அதற்கான முறையில் பின்வரும் செயல்திட்டத்தை கூட்டம் வகுத்தது.

தாலுக்கா அளவிலான அனைத்து சங்கங்களின் (தொ.ச - வி.ச - வி.தொ.ச) நிர்வாகிகள் கூட்டங்களை நடத்துவது.

வேலை நிறுத்த ஆயத்த மாநாடு: நவம்பர் முதல் வாரத்தில் ஈரோட்டில் ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்திலும்,  கோபியில் சிஐடியு மாவட்ட அலுவலகத்திலும் அனைத்து சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டை நடத்துவது.  

வேலை நிறுத்த நோட்டீஸ்: நவம்பர் 10-ஆம் தேதி அனைத்து சங்கங்களும் தனியாகவும், வாய்ப்புள்ள இடங்களில் கூட்டாகவும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்குவது

துண்டறிக்கைகள் விநியோகிப்பது: கோரிக்கைகளை விளக்கி நவம்பர் 11,12 தேதிகளில் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான குழுக்களாகப் பிரிந்து பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்குவது

ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்தி 20-11-2020 அன்று ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, நம்பியூர், தாளவாடி ஆகிய அனைத்து வட்டத் தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது.

தொழில், வர்த்தக அமைப்புகளின் ஆதரவைக்கோருவது: நவம்பர் 17,18 தேதிகளில், பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு தொழில், வர்த்தக அமைப்புகளுக்கு கடிதம் கொடுப்பது.

வாயில் கூட்டங்கள் நடத்துவது:நவம்பர் 21 முதல் 25 வரை ஆலைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் பணிமனைகளில் வாயில் கூட்டங்கள் நடத்துவது. 

வேலைநிறுத்தம் - மறியல்: நவம்பர் 26 அன்று மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்களை வேலை நிறுத்தத்தில் பங்கேற்கச் செய்வது. அன்று ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, நம்பியூர்,தாளவாடி ஆகிய அனைத்து தாலுக்கா தலைநகர்களிலும் பெருந்திரளான தொழிலாளர்களையும், விவசாயிகளையும் பொதுமக்களையும் திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

தாலுக்கா அளவில் தயாரிப்பு கூட்டங்களை நடத்துவற்கான பொறுப்பு: ஏஐடியுசி பவானி, சத்தியமங்கலம், சிஐடியு ஈரோடு, மொடக்குறிச்சி. எல்பிஎப் அந்தியூர், நம்பியூர். ஐஎன்டியுசி பெருந்துறை. எச்எம்எஸ் கொடுமுடி. எம்எல்எப் கோபிசெட்டிபாளையம்.


Top