08/Oct/2020 10:59:25
இந்திய ரயில்வே உணவு தயாரிப்பு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (ஐஆர்சிடிசி) இணைந்து வாடிக்கையாளர்களுக்கு ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வசதியை அளிக்கப்போவதாக அமேஸான் இந்தியா நிறுவனம் (அக்.7) அறிவித்துள்ளது.
அமேஸான் செயலி மூலம் விமான மற்றும் பேருந்து பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வசதியையும் கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: இந்த புதிய திட்டத்தின் மூலம் அமேஸான் செயலியில் விமான, பேருந்து பயணச் சீட்டுகளை மட்டுமின்றி ரயில் பயணச் சீட்டுகளையும் வாடிக்கையாளர்கள் இனி முன்பதிவு செய்துகொள்ள முடியும். அறிமுகச் சலுகையாக, ரயில் பயணச் சீட்டு முன்பதிவுக்கான சேவை மற்றும் பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும், முதல் முன்பதிவுக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கும் சலுகையையும் அறிமுகம் செய்துள்ளது
அமேஸான் செயலி மூலம் ரயில்களில் இடம் இருப்பதையும், பயணத்துக்கான இடம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையையும் (பிஎன்ஆர்) வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள முடியும் என்பதோடு, அமேஸான் தொகை கையிருப்பு வாலட் மூலம் பயணச் சீட்டுக்கான கட்டணத்தையும் செலுத்திவிட முடியும். இவ்வாறு அமேஸான் வாலட் மூலம் கட்டணம் செலுத்தும் வாடிக்கையளர்களுக்கு, முன்பதிவு ரத்து அல்லது முன்பதிவு முயற்சி தோல்வியடையும்போது பிடித்தம் செய்யப்பட்ட தொகை உடனடியாக திரும்ப அளிக்கப்பட்டுவிடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது..