07/Aug/2021 07:26:52
ஈரோடு, ஆக: கேரளாவில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்தது. 2 -ஆம் அலை பல்வேறு மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து சுகாதாரத் துறையினர் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் பயனாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
ஆனால், கேரளாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தொடர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்பு பிறகு தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர வேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் காண்பிக்க வேண்டும். 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சுகாதார துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்ட எல்லைகளில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், ஈரோட்டில் இதுபோன்ற நடைமுறைகள் இனமும் கடைபிடிக்கப்படவில்லை. தொற்று அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் இருந்து ரயிலில் வரும் பயணிகள் எவ்வித பரிசோதனையும் இன்றி ஈரோடு நகருக்குள் அனுமதிக்கப்பட்டு வருவது கொரோனா நோய் தொற்றை அதிகரிக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.கொரனோ இரண்டாவது அலையின் தாக்கம் சற்றே குறைந்திருந்த நிலை மாறி, தற்போது கேரள மாநிலத்தில் மீண்டும் கொரனோ பரவல் வேகமெடுத்திருக்கிறது.
நாள் தோறும் சராசரியாக தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்திருப்பதால், தமிழக எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. சாலை மார்க்கமாகவும் ரெயில் மூலமாகவும் வருபவர்கள் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை கண்காணிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால் கேரளாவில் இருந்து ரெயில் மூலம் ஈரோடு வருபவர்களுக்கு கொரோனா குறித்த எவ்வித சோதனையும் மேற்கொள்ளாமல் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் 40 -க்கும் மேற்பட்ட ரயில்கள் கேரளாவிற்குள் சென்று ஈரோடு வழியாக வருகின்றன. இதில் வரும் பயணிகள் சோதனையின்றி அனுமதிக்கப்படுவது ஈரோடு நகரில் கொரோனா பரவலை அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் 180 -க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சுகாதாரத் துறையினர் சார்பில் ஈரோடு ரயில் நிலையத்தில் முகாம் அமைத்து வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் குறிப்பாக கேரளாவில் இருந்து வருபவர்களை தீவிர பரிசோதனை செய்த பின்னரே ஈரோட்டில் அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.