logo
மேகதாது அணை பிரச்னை- தடுப்பூசி ,கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம்: பிரதமரிடம் வலியுறுத்தினோம்: எடப்பாடி பேட்டி

மேகதாது அணை பிரச்னை- தடுப்பூசி ,கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம்: பிரதமரிடம் வலியுறுத்தினோம்: எடப்பாடி பேட்டி

26/Jul/2021 11:24:19

பிரதமர் மோடியை  அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் (26.7.2021) சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடைபெற்றது.

 மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது. தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த திட்டங்களை பிரதமரிடம் வலியுறுத்தியதாக   எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். அண்ணா தி.மு.க. கட்டுக்கோப்புடன் உள்ளது. எந்த அதிருப்தியும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் முதன்முதலாக இன்று பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரில் சந்தித்து பேசினார்கள். சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. பாரதிய ஜனதா, பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி 75 இடங்களை பிடித்தது.

இந்த நிலையில், பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கேட்டிருந்தார்கள். அதன்படி, நாடாளுமன்ற கூட்டம் இன்று நடந்து கொண்டிருந்த போதும், இன்று காலை 11 மணிக்கு சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்பட்டு சென்றார். அதுபோல அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் திங்கள்கிழமை இரவு கோவையில் இருந்து தில்லிக்கு புறப்பட்டு சென்றார்.தில்லியில் திங்கள்கிழமை  இரவு அவர்கள் இருவரும் தமிழக அரசு இல்லத்தில் தங்கினார்கள். 

டெல்லியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்.பி.யுமான ரவீந்திரநாத்துக்கு பங்களாவை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அந்த பங்களாவில் குடியேறுவதற்காக இன்று காலை 9 மணிக்கு ரவீந்திரநாத் எம்.பி. பால்காய்ச்சினார்.

இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, என்.தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன், தம்பிதுரை எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 30 நிமிடங்கள் அண்ணா தி.மு.க. தலைவர்கள் அங்கிருந்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் பாராளுமன்றத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அவரை எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. பிரதமரை காலை 11.05 மணி முதல் 11.30 வரை இரு தலைவர்களும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை இருவரும் கூட்டாக சந்தித்தார்கள்.

பிரதமருடன் பேசியது  பற்றி எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமருக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தேவையான அளவுக்கு தடுப்பூசி வழங்கவும் நானும் ஒருங்கிணைப்பாளரும் பிரதமரிடம் வலியுறுத்தினோம். அம்மா இருந்த காலத்திலும் சரி, ஓ.பன்னீர் செல்வம் இருந்த போதும் சரி, நான் முதலமைச்சராக இருந்த போதும் சரி. பிரதமரை சந்தித்து மேகதாது அணையை கட்டக்கூடாது. அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி வந்தோம். இப்போதும் அதனை தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறோம்.

மேகக்கேதாட்டு அணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். 16 மாவட்டங்கள் காவிரி நீரை குடிநீருக்காக நம்பி இருக்கிறது. எனவே, இதில் பிரதமர் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். அதனை போக்க கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

அம்மா முதலமைச்சராக இருந்தபோதும் நான் முதலமைச்சராக இருந்த போதும் தமிழ்நாட்டில் பல்வேறு சாலைகள் அமைக்க வேண்டும். சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தோம். மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இந்திய சாலைத்துறை பல்வேறு சாலைகளுக்கு அனுமதி தந்தது. அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினோம்.

தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தி வருகிறார்கள். இதனை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

கட்சி தலைமை மீது உள்ள அதிருப்தியால், அண்ணா தி.மு.க. விலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பலர் விலகி மாற்று கட்சிக்கு செல்கிறார்களே என்ற கேள்விக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், தேர்தல் நடந்து முடிந்ததும் அப்படி செல்கிறார்கள். கட்சியில் எந்த அதிருப்தியும் இல்லை. தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கட்சி கட்டுக்கோப்புடன் இருக்கிறது என்று எடப்பாடி கூறினார்.

பிரதமரிடம் பேசும்போது தி.மு.க. ஆட்சி மீது ஏதாவது புகார் கூறினீர்களா? என்று கேட்டதற்கு

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் என்ன சொல்ல முடியும். பிரதமரை சந்தித்த போது தமிழக திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் வலியுறுத்தினோம். அண்ணா தி.மு.க.வை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணிக்காக செயல்படுவோம் என்று கூறினார்.



லாட்டரி சீட்டை கொண்டு வருவது பற்றி சிந்திக்கவே இல்லை. கற்பனையில் எடப்பாடி கூறுகிறார் என்று அமைச்சர் கூறியிருக்கிறாரே என கேட்டதற்கு, ஸ்டாலின் அரசு லாட்டரி சீட்டு கொண்டு வர இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே நான் அந்த அறிக்கை வெளியிட்டேன். கற்பனையாக நான் எதுவும் சொல்லவில்லை. கொண்டு வராவிட்டால் நல்லது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பீர்களா என்று கேட்டதற்கு வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்று எடப்பாடி கூறினார்.


Top