logo
 ஈரோடு மாநகர் பகுதியில்  தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக 9 பேர் கைது 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக 9 பேர் கைது 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

25/Jul/2021 10:53:31

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாநகர் பகுதியில்  தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக 9 பேர் கைது 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை.

தமிழகத்தில் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பான் மசாலா, குட்கா கடைகளில் தாராளமாக கிடைத்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு பான் மசாலா, குட்கா இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள கடைகளில் குட்கா, பான் மசாலா விற்பனை நடைபெறுகிறதா? என்று சோதனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து அனைத்து மாவட்டத்திலும் போலீசார், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

ஈரோடு மாவட்ட எஸ்பி சசிமோகன் உத்தரவின் பேரில், ஈரோடு மாநகர் பகுதியில் டவுன் டிஎஸ்பி ராஜீ மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் நேற்று மாநகர் பகுதி முழுவதும் உள்ள பெட்டிக் கடை மளிகைக் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பான்மசாலா குட்கா கடைகளில் விற்றது தெரியவந்தது.

 நேற்று ஒரே நாளில் மட்டும் மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 40 ஆயிரம் ஆகும். 4  மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து, நகர காவல்துணை கண்காணிப்பாளர்  ராஜு கூறியதாவது: மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவுப்படி,  ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்து திடீர் சோதனை செய்தோம். இதில் சில மளிகை கடை பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பான்மசாலா விற்பனை செய்தது தெரிய வந்தது. 

இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு நபர் மீண்டும் இரண்டாம் முறை அதே தவறு செய்தால் அவர் மீது  குண்டர் தடுப்புச்சட்டம் பாயும்  என்றார் அவர்.

Top