logo
புதுக்கோட்டை மாவட்டம், குழிபிறையில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்: அமைச்சர் ரகுபதி உறுதி

புதுக்கோட்டை மாவட்டம், குழிபிறையில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்: அமைச்சர் ரகுபதி உறுதி

29/Jun/2021 07:42:52

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், குழிபிறையில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குழிபிறை வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாமினை (29.6.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் எஸ். ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் கோவிட் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மேற்கொண்ட போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கோவிட் நோய்த்தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. கோவிட் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் கிராமங்கள் தோறும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் குழிபிறை வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம்  ஆய்வு செய்யப்பட்டது. கோவிட் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாது கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஜனநாயக முறைப்படி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். பிற கட்சியினரிடம் பாகுபாடு காட்டுவதில்லை. மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும் என்பதே  முதலமைச்சரின்  எண்ணமாகும். எனவேதான் ஆளுநர் உரையில் தமிழக அரசிற்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய மக்களுக்கான அரசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பொதுமக்களுக்கும் தேவையான நலத்திட்டங்கள் பாகுபாடின்றி  நிறைவேற்றப்படும். மக்களின் நியாயமான கோரிக்கைகள் உரிய முறையில் நிறைவேற்றப்படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று குழிபிறையில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என்றார்  அமைச்சர் எஸ்.ரகுபதி.

முன்னதாக    நற்சாந்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொருட்கள் வைப்பறையில் ஏற்பட்ட தீ விபத்தினை நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் பொது சுகாதார துணை இயக்குநர் பா.கலைவாணி, ஊராட்சிமன்ற தலைவர் எஸ். அழகப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் அலகு () சிதம்பரம்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top