logo
தொலைந்துபோன குழந்தைப் பருவமும் தற்கொலைகளும்-  முனைவர் ந.முருகேசபாண்டியன்

தொலைந்துபோன குழந்தைப் பருவமும் தற்கொலைகளும்- முனைவர் ந.முருகேசபாண்டியன்

02/Oct/2020 12:21:21

இருபதாண்டுகளுக்கு முன்னர் என்னுடைய இலக்கிய ஆசான் .சி.பி., என அழைக்கப்படுகிற பேராசிரியர்  .சி.பாலசுந்தரம் அவர்கள் தனது கல்லூரிப் பணியை நிறைவுசெய்தபோது அவரைப் பார்க்க வீட்டுக்குச் சென்றிருந்தேன். எப்படி இருக்கீங்க சார்? என்ற கேள்விக்கு, ‘’மகிழ்ச்சியாக இருக்கிறேன் முருகேசா’’ என்றார் புன்முறுவலுடன். ’’வயசாகி ஓய்வுபெற்றது கஷ்டமாக இல்லையா?’’ என்று கேட்டவுடன், ’’குழந்தை, சின்னப் பையன்,  வாலிபன், நடுத்தர வயதானவர், வயசானவர் என ஒவ்வொரு பருவத்திலயும் அதற்கு உரிய கொண்டாட்டமும் சந்தோஷமும் இருக்கு. அதை அனுபவிக்கிற மனம் வேணும்என்று அவர் சொன்னது, எப்பவும் என் மனதில் நிழலாடும்.

இயற்கை ஒவ்வொரு பருவத்தையும் அதற்குரிய கொண்டாட்டத்துடன் மனிதர்களுக்குக் கொடையாக வழங்கியிருக்கிறது; யாரையும் கைவிட்டு விடவில்லை. என்னைப் பொருத்தவரையில் மானுட வாழ்வில் குழந்தைப் பருவம் ஒப்பீட்டளவில் சிறப்பானது. எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் மகிழ்ச்சி பொங்கிட அன்றாடம் குழந்தைகள் தங்களுக்கான உலகினைப் புனைகின்றனர்.

அங்கு அதிகாரம் செலுத்துகிற பெரியவர்களுக்கு ஒருபோதும் இடமில்லை.  வளமான சமூகம் உருவாகிடுவதற்கு, எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூக மனிதனாக உருவெடுப்பதற்கான அடித்தளம், குழந்தைப் பருவத்தில் விதைக்கப்படுகிறது. குழந்தைகள் தங்களுக்கான விளையாட்டு உலகில் இயல்பாகச் செயல்படுமாறு சூழலை ஏற்படுத்தித் தருவது, பெரியவர்களின் கடமையாகும்.. ’பருவத்தே பயிர் செய்என்ற முதுமொழி குழந்தை வளர்ப்பினுக்கும் பொருந்தும். கூட்டுக் குடும்ப அமைப்பு சிதலமடைந்து, அணுக்குடும்பம் மேலோங்கியுள்ள இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் உலகம் ஒவ்வொரு விநாடியும் பெரியவர்களால் திட்டமிடப்படுகிறது.

களிமண்ணைப் பிசைந்து உருவாக்கப்படுகிற பொம்மைக்கும் குழந்தையை உருவாக்குவதற்கும் வேறுபாடு இல்லை எனக் கருதுகிற பெரும்பாலான பெற்றோரின் எண்ணம் தவறானது. கருப்பையிலிருந்து வெளியே வந்த பச்சிளம் சிசு, அரை மணி நேரத்திற்குள் தாயின் மார்பில் பாலைக் குடித்திடக் கற்றுக்கொள்வது சாதாரண விஷயம் அல்ல. குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு நாளும்  புதிதுபுதிதாகக் கற்றுக்கொள்வது அதனுடைய ஜீனில் பொதிந்திருக்கிறது. வீட்டிலும் பள்ளியில் நாளும் கற்றுத் தருகிற புதிய விஷயங்களைக் குழந்தைகள் எளிதாகக் கிரகித்துக்கொள்வது அவர்களுடைய இயல்பிலே பொதிந்துள்ளது. இத்தகைய குழந்தைகளைக் கல்வி, பள்ளிக்கூடம் என்ற பெயரால், அவற்றின் இயல்பில் குழந்தைமையுடன் இருந்திட அனுமதிக்கப்படாத சமூகச்சூழல்தான் இன்று நிலவுகிறது.

 தங்களுடைய மகனான பத்து வயதுச் சிறுவனின் லட்சியம் ..டி-யில் சேர்வது எனப் பெருமையுடன் சொல்லிக்கொண்டு திரிகிற  படித்த பெற்றோர், குழந்தையின் மனநிலையைப் புரிந்திடாதவர்கள். உயர் கல்வி என்றால் என்னவென்று அறியாத சிறுவன்மீது, தங்களுடைய விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் சுமத்துகிற பெற்றோர் ஒருவகையில் வன்முறையாளர்கள்.

குழந்தையின் விருப்பு வெறுப்பு குறித்துச் சிறிதும் அக்கறை இல்லாமல், டாக்டர்/..டி.பொறியாளர் ஆக வேண்டும் என்பதற்காகப் பன்னிரண்டு வயதுச் சிறுவனைத் தினமும் சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்புகிற பெற்றோர், குழந்தையின் இளமைப் பருவத்தைக் களவாடியவர்கள் ஆவர். சிறார் பருவத்துக்குரிய கொண்டாட்டத்தைத் தொலைக்குமாறு உருவாக்கப்படுகிற சூழலில் சிக்கிய குழந்தைகள், ஒருவகையில் பரிதாபத்திற்குரியவர்கள்.

பல்வேறு சாத்தியங்கள் இருக்கிற சமூக வாழ்க்கையை அறிந்திடாமல், முகபடாம் இடப்பட்ட குதிரை போல வளர்க்கப்படுகிற குழந்தைகள், எதிர்கால வாழ்வில் தோல்வி/பிரச்சினைகளை எப்படிக் கையாளுவது என அறியாமல் தடுமாறுவது நிச்சயம். இளம்பிராயத்தில் எப்பொழுதும் பாடம் படித்தல் என்ற ஒற்றைப் போக்கில் தனது எல்லைகளைச் சுருக்கிக்கொண்ட குழந்தைக்கும் கூண்டில் அடைக்கப்பட்ட பிராய்லர் கோழிக்கும் வேறுபாடு இல்லை.

குதூகலமும் மகிழ்ச்சியும் ததும்பிடும் குழந்தைப் பருவத்தைத் தொலைத்திட்ட சிறார்கள், உயர்நிலைப் பள்ளியில் பயில்கிறபோது,  பதற்றமும் பரபரப்பும் மிக்கவர்களாக மாறி, எதிலும் சுயமான முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றனர்; சின்னத் தோல்வியைக்கூட எதிர்கொள்ள முடியாமல், குழம்புகின்றனர். இத்தகைய போக்கின் நீட்சிதான் அண்மையில்  தொடர்ந்திடும் தமிழகத்து உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களின் தற்கொலைகள். என்ன ஆச்சு இந்தப் பெரிய குழந்தைகளுக்கு என்ற கேள்வியின் பின்புலம் ஆழ்ந்த பரிசீலனைக்குரியது.

 தறகொலை என்ற நிகழ்விற்கும் தமிழரின் பொதுப்புத்திக்கும் இடையில் காலங்காலமாக நெருங்கிய தொடர்பு உள்ளது. சமகால அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்திடாமல் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தற்கொலையைத் தேர்ந்தெடுப்பது, தமிழகத்தில் பல்லாண்டுகளாக வழக்கினில் உள்ளது.

 இந்தி எதிர்ப்புப் போராட்டம், இலங்கையில் நடைபெற்ற ஈழப் போராட்டம் போன்றவற்றுக்கு ஆதரவாகத் தமிழகத்துத் தமிழர்கள் தற்கொலை செய்துகொண்டது  தற்செயலானது அல்ல. ஒருவிதமான கோழை மனோபாவமும், கையலாகத்தனமும்தான் தற்கொலையைத்  தேர்ந்தெடுக்கத் தூண்டுகின்றன.

அதீதமான சுயநலமும் தற்கொலையில் பொதிந்துள்ளது. நீட் தேர்வில் வெற்றியடைந்து மருத்துவராக முடியவில்லை என்பதற்காக அனிதா என்ற பதின்பருவப் பெண் தற்கொலை செய்துகொண்டதற்கு நடுவண் அரசுதான் மூலகாரணம் என்றாலும், தற்கொலை எப்படி தீர்வாகும்? வாழ்க்கையில் மருத்துவராவது என்பதைத் தாண்டி வேறு எதையையும் சிந்திக்கவியலாத மனநிலையை அனிதாவிற்குள் அழுத்தமாகப் பதித்த பொதுப்புத்தி உருவாக்கப்பட்டிருப்பது, கண்டனத்திற்குரியது.  

மருத்துவப் படிப்பு என்ன  அதியற்புதமானதா? அதைப் படிக்க இயலாவிட்டால் என்ன குடி மூழ்கி விடுமா? மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை என்ற மன அழுத்தம் தாங்காமல்தான் அனிதா தற்கொலை செய்துள்ளார். அவருக்கு நல்ல ஆலோசனை வழங்கப்பட்டிருந்தால்,  அநியாயமாக நிகழ்ந்த தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்.

இன்று பள்ளியில் பயிலுகிற மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்கள் வாங்க வேண்டுமென்ற வலியுறுத்துதலை எதிர்கொள்ள இயலாமல், மன அழுத்தத்திற்கு ஆளாவது சாதாரணமாக நடைபெறுகிறது. தொடர்ந்து குறைந்த மதிப்பெண்கள் பெற்றிடும்போது, ஒருவிதமான குற்ற மனநிலைக்குள்ளாகிடும் மாணவர்கள், அதிலிருந்து வெளியேற வழியற்றுத் தத்தளிக்கின்றனர். குறிப்பிட்ட பாடத்தைப் படித்து, அதில் தேர்வெழுதி, குறைந்தபட்ச மதிப்பெண்கள்கூட பெற்றிட  முடியாத நிலையைக் குற்றமாகக் கருதப்படுகிற சூழலில், குழந்தை மன உளைச்சலுக் குள்ளாகிறது.

இத்தகு சூழலில் குடும்பத்தில் சின்ன விஷயங்களைக்கூடத் தாங்கிட முடியாமல் தற்கொலையைத் தீர்வாகக் கருதிடும் பெரியவர்கள் சிலரின் மனநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குத் தொற்றியது எப்படி என்பது முக்கியமான கேள்வி.   பட்டாம்பூச்சிகள்போல சிறகடித்துப் பறந்திட வேண்டிய பள்ளி மாணவர்கள், இளம் வயதிலே வெறுப்படைந்து, எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிட முயலுவதற்குக் காரணம் என்ன? தற்கொலையைத் தேடிப் போவது ஏன்? யோசிக்க வேண்டியுள்ளது.

பீகார்சத்தீஸ்கர், ஒடிசா, மத்திய பிரதேசம், குஜராத் போன்ற வடஇந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகமானது கல்வி, மருத்துவம், சாலைப் போக்குவரத்து போன்ற பல்வேறு அம்சங்களில் பிரமாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளது. பெரும்பாலான வட மாநிலங்கள் சுமார் முப்பதாண்டுகள் பின்தங்கிய  நிலையில் உள்ளன.

தமிழகத்தில் நகரமயமாதல் துரிதமாக நடைபெறும் வேளையில், நுகர்பொருள் பண்பாடு எங்கும் நீக்கமறப் பரவியுள்ளது. ஆடம்பரப் பொருட்கள் தொடங்கி எதையாவது வாங்கிக் குவிப்பது பெருவழக்காகி உள்ளது. குழந்தையை எல்.கே.ஜி.யில் சேர்ப்பதற்கு ஆண்டுக்கு ரூ.1,50,000/- தருவதற்கு மகிழ்ச்ச்சியுடன் முன்வருகிற பெற்றோரின் நோக்கம், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, சிறப்பான கல்வி என்ற நம்பிக்கை. இன்னொருபுறம் என்னுடைய பிள்ளை எவ்வளவு காஸ்ட்லியான பள்ளியில் படிக்கிறான் எனப் பிறரிடம் பீற்றிக் கொள்வதற்காகத்தான்.

பிராண்ட் என்பது உன்னதமானது என உருவாக்கப்படுகிற வணிக விதிகள் பள்ளிகளுக்கும் பொருந்திப் போவது துயரமானது. நகரத்தில் பிரபலமான பள்ளியில் சேர்ந்து பயிலுவதால் மட்டும், ஒரு குழந்தையின் எதிர்காலம் வளமாகிவிடும் எனக் கருதுவது மூடநம்பிக்கை. குழந்தையின் மனதைச் செழுமைப்படுத்தி, எதிர்காலத்தில் பொறுப்பான குடிமகனாக உருவாக்கிட வேண்டிய கல்வி முறையானது, இன்று அர்த்தம் இழந்துள்ளது. கல்வியும் நுகர்பொருளாக மாறியுள்ள சூழலில் குழந்தையின் மனது குறித்து யாருக்கு என்ன அக்கறை? இத்தகு சூழலில் பயிலுகிற வளரிளம் மாணவர்கள், ஒதுங்கிட நிழலின்றி, மரணத்தின் கோரப் பிடியில் சிக்கியுள்ளனரா?

 எது சரியான கல்வி என்ற புரிதலற்ற நிலையில் மல்டி ஸ்பெஷாலிட்டி பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது உயர்வானது என்ற எண்ணம் எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. இதனால் கல்விக் கொள்ளையர்கள் அல்லது கல்வி மாபியாக்கள் தமிழகமெங்கும் ஆழமாகக் காலூன்றியுள்ளனர். பள்ளியின் பேருந்து தொடங்கி, மையப்படுத்தப்பட்ட கட்டடம் கழிவறை என எங்கும் குளிரூட்டப்பட்ட நிலையில் புதிய வகைப்பட்ட மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர். அதேவேளையில் தண்ணீர் வசதியற்ற கழிப்பறைகள்கூட போதிய எண்ணிக்கையில் இல்லாத அரசு பள்ளிகளில் பயிலுகிற மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

இரு வேறு உலகில் மாணவர்கள் கற்கிற சூழல் நிலவுகிறது.  தாய் மொழியான தமிழில் கல்வி கற்பது கேவலம் என்பதுடன், அது இன்றைய வாழ்க்கைக்குத் தேவையற்றது என்ற கருத்து வலுவடைந்துள்ளது. இத்தகைய போக்கு கிராமப்புறங்களிலும் வேகவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

இன்னொருபுறம் காட்சி ஊடகங்களின் பெருக்கத்தினால், ஏற்கனவே நிலவிய சமூக மதிப்பீடுகள் சிதலமாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் பிறந்து வளர்கின்ற குழந்தைகள், எல்லா மட்டங்களிலும் பெற்றோர் தொடங்கி ஆசிரியர் எனப் பலரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியுள்ளது. குழந்தைக்கான அசலான தேவை எதுவென யோசிக்காமல் அவனை டாக்டராக்க வேண்டுமென்ற விருப்பம், பெற்றோரைப் பாடாய்ப் படுத்துகிறது. வகுப்பிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் மருத்துவராக உருவாவது நடைமுறை சாத்தியமற்றது என்ற புரிதல் பலருக்கும் இல்லை. இத்தகைய மனநிலையின்  விளைவுதான் நாமக்கல் வட்டாரப் பிராய்லர்க் கல்விக்கூடங்கள் புற்றீசல் போலப் பெருகியுள்ளன.

இரண்டு வயதிலே ப்ரீ கேஜி வகுப்பில் சேர்க்கப்படுகிற குழந்தை, தொடர்ந்து எல்.கே.ஜி., யூ.கே.ஜி. என ஐந்து வயதிற்குள் முடிக்க வேண்டிய வகுப்புகள் தொடர்கின்றன. அதிலும் மூன்று வயதில் எல்.கே.ஜி.யில்  சேர்க்கப்படுகிற குழந்தை எழுதுவதும் மனப்பாடம் செய்வதும் அவசியமானதாக வலியுறுத்தப்படுகிறது. கற்றல்திறனைப் பொருத்தவரையில் ஒவ்வொரு குழந்தையையும் தனித்த இயல்புடையன என்ற கருத்தினைச் சிறிதும் அறியாத ஆசிரியர்கள் பெருகியுள்ளனர். எல்லாக் குழந்தைகளையும் ஒரே டிரம்மில் போட்டுக் குலுக்குகிற கல்வியைப் போதிப்பது, குழந்தையின் தனித்துவமான மனநிலைக்கு முரணானது. அப்புறம் ரேங்க் என்ற பொறி வேறு. எல்லாப் பெற்றோரும் தங்கள் குழந்தை வகுப்பில் முதலிடம் பெற வேண்டுமெனக் குட்டிப் பிள்ளைகளை இம்சிக்கத் தொடங்குகின்றனர்.

மதிப்பெண்கள் என்ற பூச்சாண்டி வேறு குழந்தைகளை இடைவிடாமல் துரத்துகிறது; தன்னம்பிகைக்குச் சவால் விடுகிறது. இயற்கையாகவே எந்தவொரு விஷயத்தையும் கற்கும் இயல்புடைய குழந்தைகள்மீது திணிக்கப்படுகிற பாடச்சுமையினால், மனரீதியில் குழம்புகிற நிலை சில குழந்தைகளுக்கு ஏற்படுகிறது; மனப்பிறழ்வுகூட சிலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.  படி..படி..படி.. என்ற சொற்கள் ஏற்படுத்துகிற மன உளைச்சலினால், பாடப் புத்தகம், ஆசிரியர், பள்ளிக்கூடம் எனக் கல்வி தொடர்புடையனவற்றை வெறுக்கிற குழந்தைகள் நவீனக் கல்விமுறையில் பெருகியுள்ளனர்.

பள்ளியில் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியாத சூழலில், ஆசிரியரிடம் வாங்குகிற திட்டுகள் ஒருபுறம் எனில், படிப்பது சிரமமாக இருக்கிறது என்று பெற்றோரிடம் சொல்வதுகூட இயலாத நிலை இன்னொருபுறம் நிலவுகிறது. இருதலைக் கொள்ளியில் சிக்கிய எறும்பு போலத் தவிக்கிற மாணவர், இக்கட்டிலிருந்து தப்பிக்க ஏதாவது செய்ய முயலுகிறார். அது, சிலவேளையில் தற்கொலையாக இருப்பதுதான், பள்ளிக்கூட வாழ்க்கையின் பெருந்துயரம்.

பெரிய காம்பவுண்டு சுவர்களுடன் விரைத்திருக்கிற பெரும்பாலான பள்ளிகள் ஒருவகையில் மாணவர்களைப் பொருத்தவரையில் சிறைச்சாலைகள்தான். காலையில் பிரேயரில் தொடங்குகிற அறிவுரை நாள் முழுக்கத் தொடர்கிறது. அதிலும் கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் தருகிற பள்ளி எனில் ஆசிரியர்கள் நிலையும் திண்டாட்டம்தான். ஆயிரம் மாணவர்கள் படிக்கிற பள்ளிக்கூடம்கூட எவ்விதமான ஓசையும் இல்லாமல் மௌனத்தில் உறைந்திருக்கும் சூழல், போற்றப்படுவதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

காலையில் ஒன்பது மணிக்குள் அலுவலகத்தில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வதற்காக விரைந்தோடுகிற ஆசிரியர்களுக்கு நாளடைவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. கல்வி நிலையம் என்பது சுதந்திரமானது என்ற கருத்தியல் மாறி, தொழிற்சாலை போல ஆகி விட்டது.

எப்படியாவது மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பது, எல்லோரையும் தேர்ச்சியடைய வைத்தல் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சூழலில்,  இரவு ஒன்பது மணிக்குக்கூடப் பள்ளியில் ஆசிரியர் தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மாணவர்கள் 100% தேர்ச்சி அடைய வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்படுவது எப்படி சரியாகும்? எவ்வளவுதான் சிறந்த ஆசிரியர் என்றாலும் சில மாணவர்கள் தேர்வில் தோல்வியடையலாம்.


சில மாணவர்களுக்கு இயல்பிலே கற்றல் குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள் வணிகம் உள்ளிட்ட பிற துறைகளில் ஈடுபட்டுப் பொருள் ஈட்ட முடியாதா? திரைப்பட நடிகர், அரசியல்வாதியாகி கோடிக்கணக்கில் சம்பாதிக்க இயலாதா? வகுப்பில் இருக்கிற எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும்.


இல்லாவிடில் ஆசிரியர் மீது விசாரணை என்ற நிலை, தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு பள்ளிகளிலும் வந்து விட்டதுசிரியர் தொழிலில்  ர்ப்பணிப்புடன் செயல்படுகிற ஆசிரியரின் ரத்தவோட்டத்தை அதிகரிக்கும் வகையிலான பள்ளிக்கூடத்தின் கறாரான செயல்பாடுகள், ஒருநிலையில் சித்ரவதைக்கூடத்தில் பணியாறுகிற உணர்வைத் தருகின்றன.

உண்மையிலே கல்வி மீது அக்கறையுள்ள மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்த இயலாமல், இன்றைய  ஆசிரியர் பொத்தாம் பொதுவில் பாடம் நடத்துகிறார். வகுப்பில் பாடம் நடத்துவது என்பது ஆசிரியர்  புதிய விஷயத்தை மாணவர்களுக்கு உற்சாகத்துடன் சொல்வது, மாணவர்களும் ஆர்வத்துடன் பாடம் கேட்பது என்ற நிலை முற்றிலும் மாறி விட்டது.

இலக்கிய பாடத்தைக்கூட வறட்சியாக நடத்திடும்போது, அதிலுள்ள உன்னதமான விஷயங்கள் அர்த்தம் இழக்கின்றன. மதிப்பெண்களுக்கான ஓட்டத்தில் ஆசிரியரும் தன்னுடைய அசலான தன்மையை  இழந்துறண்டு போய்ப்  பெயருக்காக  நடைபெறுகிறது.  வைரக்கல்லைக் கூழாங்கல்லாக மாற்றிடும் பணியை இன்றைய கல்விக்கூடங்கள் அழுத்தமாகச் செய்கின்றன

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் பின்னர் விடுமுறை என்பது இல்லாமல், தொடர்ந்து பள்ளிக்கு ஆசிரியர்கள் வர வேண்டியது கட்டாயமாகும். தற்செயல் விடுப்பு எடுப்பதற்குக்கூடப் பள்ளிச் செயலரைப் பார்த்து அனுமதி வாங்கிட வேண்டியது அவசியம்.

ஆசிரியர்களுக்கும் நவீனக் கொத்தடிமைகள் வேறுபாடு எதுவும் இல்லை. பள்ளியில் இருந்து நீக்கி விடப்படலாம் என்ற எண்ணத்துடன் எப்பொழுதும் பதற்றத்துடன் பணியாற்றுகிற ஆசிரியரால் மாணவர்களை நேசிப்பது என்பது இயலாத செயல். யோசிக்கும்வேளையில் ஆசிரியர்- மாணவர் உறவு என்பது பூவைப் போன்று மென்மையானது. ஒவ்வொரு நிமிடமும் மாணவர்களுடன் ஆசிரியர் கலந்து உறவாடிடும் இனிய கணங்கள், அற்புதமானவை. ஆனால் யதார்த்ததில் பள்ளிச் சூழல் காரணமாக ஆசிரியரை எதிரியாகப் பாவிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது.

மேல்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களைப் படிக்கவில்லை எனக் கண்டிப்பதற்குப் பயப்படுமாறு ஆசிரியர் தொழில் மாறியுள்ளது. சமூகச் சீரழிவுகளை இளம் வயதிலே அறிந்துள்ள சில பள்ளி மாணவர்கள் ஒருவகையில் திமிருடன் ஆசிரியர்களை மதிப்பது இல்லை. மேல்நிலைப்பள்ளி மாணவர்களில் சிலர் வகுப்பிற்கு வரும்போது பியர் குடித்துவிட்டு வருகின்றனர்.

அவர்களைக் கண்டிக்க முடியவில்லை என வருத்தப்பட்ட ஆசிரியரை எனக்குத் தெரியும். இத்தகைய மாணவர்கள் செய்கிற ஒழுங்கீனங்களைக் கண்டித்தால், ஆசிரியரின் பெயரை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுவதும் பரவலாக நடைபெறுகிறது. ஆசிரியர் தொழில் புனிதமானது எனப் பாரம்பரியமாக நிலவும் நம்பிக்கை இன்று அபத்தமாகி விட்டது.

இன்னொருபுறம்  ஆசிரியர் தொழிலின் மேன்மை/உன்னதம் குறித்து எதுவும் அறிந்திடாமல், எளிதாகச் சம்பாதிப்பதற்கான வழி என ஆசிரியராக மாறியுள்ள பலரின் செயல்கள் கல்வியியலுக்கு முரணானவையாக உள்ளன. பூ மலர்வது போல மலர்ந்திடுகிற குழந்தையின் மீது, கல்வி என்ற பெயரில் அதிகாரம் செலுத்துகிற ஆசிரியரின் செயல்கள் வன்முறை தோய்ந்தவை. இத்தகைய ஆசிரியர்கள் பொதுவாக மாணவர்களை ஒருபோதும் நேசிப்பது இல்லை.

அதேவேளையில் வகுப்பறையைத் தொந்தரவாகக் கருதுவதுடன், மாணவர்கள் செய்கிற சின்ன சேட்டைகளைக் கண்டு கடுப்படைந்து, மூலநோயில் அவதிப்படுகிறவர்கள்போல எப்பொழுதும் சிடுசிடுத்த முகத்துடன் காணப்படுகின்றனர். கல்வியின் மாண்பு, மாணவனின் இயல்பு குறித்து எவ்விதமான அக்கறையுமற்ற ஆசிரியர்களை விட்டு விலகியே நிற்கின்றனர் மாணவர்கள். மாலை வேளையில் வட்டியை வசூலிக்க வேண்டுமென வகுப்பறையில் நினைத்து கொண்டிருக்கும் பள்ளிக்கூட ஆசிரியர் முற்றிலும் கற்பித்தல் தொழிலுக்கு விரோதமானவர்.

இத்தகைய புல்லுருவிகள் இன்று கல்வித்துறையில் நிரம்ப ஊடுருவியுள்ளன. பெற்றோருடன்கூட கலந்து ஆலோசிக்க முடியாத பிரச்சினையை ஆசிரியரிடம் பகிர்ந்து ஆலோசனை பெற வேண்டிய நிலையில் இருக்க வேண்டிய கல்வி நிலையங்கள், இன்று மனனம் செய்கிற ரோபாக்களை உருவாக்கிக் கொண்டிருப்பதுதான் மாணவர் தற்கொலைகளுக்குக் காரணம் என்று சொல்ல முடியுமா

குழந்தை வளரிளம் பருவத்தை அடையும்போது, பொதுவாகப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. சில குழந்தைகள் கற்றலில் ஆர்வமின்மை காரணமாக எதையும் மெல்லக் கற்றுக்கொள்ளும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். ஹிந்தி திரைப்படமானதாரே ஜமீன் பர்படத்தில் வருகிற சிறுவனைப் போன்றவர்களை முரட்டுத்தனமாக நடத்துகிற பெற்றோரும் ஆசிரியரும் இன்றைய சமூகத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றனர்.

எலியோட்டமாகக் குழந்தைகளை ஓடவிட முயலுகிறவர்கள், குழந்தைமையின் அற்புதத்தைப் புரிந்திடாதவர்கள். எப்பொழுதும் கண்காணிப்பிற்குள்ளாகிடும் சூழலில், வாழ்கிற குழந்தையின் உலகம், துயரத்தால் நிரம்பி வழிகிறது. எப்படி பார்த்தாலும் அன்பிற்காக ஏங்குகிற குழந்தையுடன் கலகலவென உரையாடாமல், தங்களுடைய லௌகீக வாழ்க்கையில் பரபரவென மூழ்கியிருக்கிற பெற்றோர், ஒரு நிலையில் அந்தக் குழந்தையின் உலகிலிருந்து விலகுகின்றனர்.

கூடிப் பகிர்ந்துண்டு வாழ்கிற வாழ்க்கைக்கு மாற்றாக வீட்டில் ஆளுக்கொரு அறை எனத் தனித்தனித் தீவுகளில் வாழ்கிற சூழல், குடும்பத்தினரைத் தனிமைப்படுத் துகிறது. இன்றைய ஸ்மார்ட் மொபைல் போன் வேறு ஓவ்வொருவரையும் அவரவர்க்கான உலகில் ஒற்றையாகப் பயணித்திட வழி வகுத்துள்ளது. தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன், வாட்ஸ் அப், முகநூல் போன்ற ஊடகங்களை எவ்வாறு கையாளுவது என்பது புலப்படாமல் அவற்றுக்குள் மூழ்கிடும் பள்ளிக்கூட மாணவர்கள் பெருகியுள்ளனர். வீடியோ கேம் விளையாட்டு போதைக்கு அடிமையாகிப் போனவர்கள், எப்பொழுதும் வேறு விநோத உலகில் பயணிக்கின்றனர்.

முகத்திற்கு முகம் நேரடியான தொடர்பு இல்லாமல் வாழ்கிற பள்ளி மாணவர்கள், ஒருவிதமான தனிமையில் தங்களுக்குள்ளாக முடங்கி அவதிப்படுகின்றனர். இந்நிலையில்,  மாணவர்கள் போதையுடன் வகுப்புக்கு வருகின்றனர் என்று ஆதங்கப்படுகிற ஆசிரியர்கள் என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கின்றனர். எட்டாவது படிக்கிற மாணவனும் மாணவியும் காதல் கடிதம் பரிமாறிக் கொள்ளும்போது, என்ன நடவடிக்கை எடுப்பது என்று ஆசிரியர்கள் குழம்புகின்றனர். ஸ்மார்ட் போனில்  தொடர்ந்து தர்சிக்கிற போர்னோ காட்சிகள் ஏற்படுத்துகிற மன உளைச்சலும் அவஸ்தையும் பதின்பருவ வயதில் கடுமையான தொல்லைதான். ஒரு கட்டத்தில் பாலியல் உறவை நேரடியாக அனுபவிக்க விழைகிற பள்ளி மாணவனின் மனதில் தன்னுடைய செயல் குறித்துக் குற்ற மனம் என்று எதுவும் இல்லை. இதனால்தான் இணையத்தில் பள்ளி மாணவர்களின் பாலியல் காட்சிகள் பெரிய எண்ணிக்கையில் கசிந்துகொண்டிருக்கின்றன.

ஏதாவது பிரச்சினை எனில் கருக்கலைப்புக்கான வழிமுறைகளையும் மாணவர்கள் அறிந்திருக்கின்றனர் என்று ஊடகத்துறை நண்பர் சொல்வதைக் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் பெண் கவிஞரான எனது நண்பர், உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கர்ப்பமடையும் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. சமூக விழுமியங்கள் குறித்து அக்கறையற்ற சமூகத்தில் வாழ்கிற மாணவமாணவியர் எதுவும் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் பெருகியுள்ளன என்றுதான் கருத வேண்டியுள்ளது.

ஒருபுறம் பள்ளிக்கூடம் தருகிற நெருக்கடி என்றால் இன்னொருபுறம் ஸ்மார்ட் போன் மூலம் அறிந்திட பாலியல் காட்சிகள் இன்னொருபுறம் மாணவர்களைத் துரத்துகின்றன. பெரிய குழந்தைகள் இயல்பாக இருக்கவிடாத சமூகச் சூழலில் வளர்கிறபோது, அவர்கள் சின்ன விஷயத்திற்குக்கூட நொறுங்கிப் போகின்றனர். இத்தகைய மாணவர்கள் இறுதியில் சென்று சேர்கிற இடம்தான் தற்கொலை.

 கிராமத்தில் வீட்டை வாடகைக்குக் கொடுப்பது என்றால் ஆசிரியருக்குத்தான் முதலிடம் தருகின்றனர். ஆசிரியர் தொழில் புனிதமானது என்று நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. நடைமுறையில்  ஆசிரியர் என்றால் சமூக அடுக்கில் உச்சியில் கண்ணியமாக இருப்பவர் என்ற  பிரேமை மெல்லக் கலைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குப் பணி மாற்றம் பெறுவதற்காகக் கையில் 7 லட்சங்களுடன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கோட்டையில் காத்திருக்கிறார்.

எப்படி அந்த ஆசிரியர் லஞ்சமாகச் செலவழித்த தொகையை மீண்டும் பெற முடியும்? அவரால் மாணவர்களுக்குக் கற்பித்தலை ஈடுபாட்டுடன்  செய்ய முடியுமா? மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்திட குறைந்தபட்சம் இருபத்தைந்து லட்சங்கள் தரவேண்டிய சூழலில், கையில் பணம் வைத்திருக்கிற யார் வேண்டுமானாலும் ஆசிரியராகி விடலாம்; பொறுக்கிகூட ஆசிரியராக வடிவெடுக்கலாம். இதனால்தான் பள்ளி மாணவியிடம்  பாலியல்ரீதியில் தகாத முறையில் நடந்திட முயலும் ஆசிரியர், ஊராரிடம் செருப்படியும் உதையும் வாங்குவது நிகழ்கிறது. வாழ்வியல் அறநெறிகளை அறியாத புதிய தலைமுறை ஆசிரியர்களிடம் கல்வி பயிலும் மாணவர்களின் நிலை பரிதாபம்தான்

 பொதுவாக இன்றைய கல்விமுறையின் மாபெரும் கோளாறு டியூசன்கள்தான். பகல் முழுக்கப் பள்ளிக்கூடத்தில் நேரத்தைச் செலவழிக்கிற மாணவர்கள், மாலை வேளை தொடங்கி இரவுவரை நீளும் தனிப்பயிற்சியில் போட்டு உருட்டப்படுகின்றனர். அதிலும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி டியூசன் என அதிகாலையிலே கிளம்புகின்றனர். ஒரே நாளில் மூன்று டியூசன்களுக்குச் செல்கிற மாணவர்கள், அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியைத் தொலைக்கின்றனர்.

இன்று எல்.கே.ஜி. முதலாக டியூசன்களுக்குப் பிள்ளைகளை அனுப்புவது சாதாரணமாக நடைபெறுகிறது. அறுபதுகளில் வகுப்பறையில் பாடத்தைப் படிக்கச் சிரமப்படுகிற மக்குப் பிள்ளைகள்தான் டியூஷனுக்கு அனுப்பபட்டனர் என்பது இன்றைய பெற்றோர் அறியாததது. எப்படியாவது நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவதற்காகப் படுகிற பாடுகள், மாணவர்களுக்கு உருவாக்கிடும் மன அழுத்தம் கொடூரமானது. மாதிரித் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினால்கூடத் தன்னையே சித்ரவதைக்குள்ளாக்கிடும் மனநிலையில் வாடுகிற பதின் பருவத்தினர் உளவியல்ரீதியில் குழப்பம் அடைகின்றனர்.

மதிப்பெண்கள் குறைந்தால் என்ன இழப்பு என்ற புரிதல் இல்லாமல், தன்னையே குற்றவாளியாகக் கருதித் தனக்குள்ளாகக் குமைந்திடுகிறவர்களுக்குத் தேறுதல் சொல்வதற்குக்கூட யாரும் இல்லை. குடும்பத்திலும் ஒட்ட முடியாமல், பள்ளியிலும் ஒத்துப்போக முடியாமல், தவிக்கிற மாணவர்கள், எங்கே செல்வது என்று குழம்புகின்றனர். இத்தகைய போக்கு அழைத்துச் செல்கிற இடம்தான் தற்கொலை என்று சொல்லலாமா?

 குழந்தையின் மீதான் அதீதமான ப்ரியத்தினால், வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரவேண்டுமென்ற எண்ணத்தினால்தான் பெரும்பாலான பெற்றோர், தங்களை அறியாமல் தவறுகள் செய்கின்றனர். குழந்தையைச் செழுமைப்படுத்தி, சிறந்த மனிதனாக உருவாக்குவதற்காகத்தான் கல்வி கற்றல் என்ற புரிதல் இல்லாமல் செய்யப்படுகிற ஒவ்வொரு செயலும் குழந்தைக்கு எதிரானவைதான்.

எல்லாவற்றுக்கும் வரையறை உண்டு என்ற நிலையில் கல்விக்கும் எல்லை உண்டு என்ற புரிதலுடன் அணுகினால், தேர்வில் தோல்வியடைகிற குழந்தையைப் புரிந்திட முடியும். குழந்தை வளர்ந்திடும்போது, எதிர்காலத்தில் கணிசமான வருமானம் பெற்றிட கல்விதான் அடிப்படை என்றால், அதைவிடச் சுயமாகத் தொழில் செய்து மில்லியனராக வாழ்ந்திட வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில்கொண்டால் பெற்றோரின் மனப்பதற்றம் குறைந்திடும். பூமியில் எந்தவொரு உயிரினத்திலும் குட்டிகள் தற்கொலை செய்துகொள்ளாதபோது, மனிதக் குழந்தைகள் மட்டும் தற்கொலையைத் தேர்ந்தெடுப்பது, இன்றைய நோய்வயப்பட்ட சமூகச் சீரழிவின் வெளிப்பாடு.

 

Top