logo
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு உள்ளிட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து:தமிழக அரசுக்கு சிபிஎம் பாராட்டு

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு உள்ளிட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து:தமிழக அரசுக்கு சிபிஎம் பாராட்டு

24/Jun/2021 08:32:59

புதுக்கோட்டை, ஜூன்: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது உள்ளிட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்துசெய்வதாக தமிழக அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின்புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை:

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், தென் மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம், சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள்மீது கடந்த ஆட்சிக் காலத்தில் போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வழக்குகளைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்வதாக தமிழக முதல்வரின்  அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும்  வரவேற்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போடப்பட்ட வழக்கு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது. இந்த சந்தேகத்தைப் போக்கும் விதமாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஹைட்ரோ கார்பன் வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சரின் அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. இதற்காக தமிழக முதல்வர் மு..ஸ்டாலினுக்கும், மாவட்ட அமைச்சரும் சுற்றுச்சூழல்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாவட்ட விவசாயிகள் சார்பாகவும் மகிழ்;ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இத்தோடு ஓஎன்ஜிசியால் போடப்பட்ட ஆழ்துளை எண்ணைக் கிணறுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்ககையில் கூறப்பட்டுள்ளது.

 

Top