logo
 பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும்  உரிமை: தனியாருக்கு தாரைவார்த்தை மக்கள் அனுபவிக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமை: தனியாருக்கு தாரைவார்த்தை மக்கள் அனுபவிக்கிறார்கள்.

12/Dec/2020 11:17:03

சென்னை: பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும்  உரிமையை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்த்தை மக்கள் அனுபவிக்கிறார்கள் என்று கொமதேக குற்றம்சாட்டியுள்ளது. 

இது குறித்து  அக்கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விலை நிர்ணயம் அதிகாரம் சென்றால் என்ன விளைவை மக்கள் சந்திக்க வேண்டிவரும் என்பதற்கான உதாரணமே பெட்ரோல், டீசல் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை வரலாறு காண அளவில் குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்பதை நாம் அறிவோம். 

கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே கோடிக்கணக்கான ரூபாய் இலாபமடைய வேண்டுமென்று மத்திய அரசு திட்டமிட்டு அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தனியாருக்கு கொடுத்துவிட்டோம் எங்களுக்கும் அதுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று ஏழை எளிய மக்கள் கஷ்டப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

 பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. மத்திய அரசு எந்தவொரு முடிவை எடுக்கும் போதும் மக்களுக்கு பெரிதும் நன்மை கொடுக்கும் என்று சொல்லி சொல்லியே அதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள். அப்படி கொண்டு வரும் அனைத்தும் மக்களுக்கு பெரியளவில் பாதிப்பை தான் ஏற்படுத்தியிருக்கிறது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கையாக இருந்தாலும், ஜிஎஸ்டியாக இருந்தாலும் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் கறுப்புப்பணம் ஒழிக்கப்படும் என்று மக்களிடத்தில் சொல்லப்பட்டதே, அதுபோல ஒழிக்கப்பட்டுவிட்டதா ?. ஜிஎஸ்டியை அமல்படுத்தும் போது ஒரே நாடு ஒரே வரி என்று அமர்க்களமாக விளம்பரம் செய்தார்கள். ஆனால் அதில் எதுவும் நன்மை நிகழ்ந்தா. தமிழக அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரிப்பணத்தை மத்திய அரசிடமிருந்து கெஞ்சி பெற வேண்டிய நிலைதான் உருவானது. 

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் மிக குறைவான விலையில் மக்களுக்கு கிடைக்கும் என்றார்கள். ஆனால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தார்களா. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை தனியாருக்கு கொடுக்கும் போது கச்சா எண்ணெய் விலையில் சிறிய விலை குறைவு ஏற்பட்டாலும் அதன் பலனை மக்கள் நேரடியாக அனுபவிப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால் இன்றோ தனியார் நிறுவனங்கள் மட்டுமே கொள்ளை இலாபத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

 இப்படி பல பொய்களை மத்திய அரசு மக்களிடம் கூறி கார்ப்பரேட் நிறுவனங்களை எல்லா துறைகளிலும் கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர்.சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 40 ரூபாய்க்கு தான் விற்கப்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார். 

அதேபோல வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று கூறி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமையாக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஒவ்வொரு சட்டம் கொண்டு வரும் போதும் சொல்லப்படும் நன்மைகள் ஒன்று கூட நடைமுறையில் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. எனவே தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கே கொண்டு வர வேண்டும். 


Top