logo
ஊரக வேலைத்திட்டத் தொழிலாளர்களை சாதிவாரியாகப் பிரிப்பதைக்கண்டித்து விதொச, தீஒமு ஆர்ப்பாட்டம்

ஊரக வேலைத்திட்டத் தொழிலாளர்களை சாதிவாரியாகப் பிரிப்பதைக்கண்டித்து விதொச, தீஒமு ஆர்ப்பாட்டம்

21/Jun/2021 07:26:59

புதுக்கோட்டை, ஜூன்: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்களை சாதிவாரியாகப் பிரித்து செயல்படுத்த முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை  புதுக்கோட்டையில் விவசாயத் தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ஊதியப் பட்டுவாடாவையும், வேலை அளிக்கும் முறையிலும்  பட்ஜெட் தயாரிப்பதற்கு தனித்தனியாக பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர சாதிவாரியான பட்டியலைக் கேட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தொழிலாளர்களை சாதிய ரீதியாகப் பிரிப்பதற்கும், நிதி ஒதுக்கீடு தனியாக செய்வதற்குமான ஏற்பாடாகும்.

ஒன்றிய அரசின் இந்த உழைப்பாளர் விரோத நடவடிக்கையைக் கண்டித்து  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் திங்கள் கிழமை  நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு விதொச மாவட்டத் தலைவர் கே.சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.ஜீவானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.


கோரிக்கைகளை விளக்கி விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.அன்புமனவாளன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, செயலாளர் .ஸ்ரீதர், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி.

மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் எம்.சண்முகம், எம்ஏ.ரகுமான், எல்.வடிவேல், எஸ்.பாண்டிச்செல்வி, பாபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவை சங்க நிர்வாகிகள் அளித்தனர்.

Top