logo
மரம் வளர்ப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் அரசு பள்ளி ஆசிரியர்

மரம் வளர்ப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் அரசு பள்ளி ஆசிரியர்

21/Jun/2021 06:15:48

புதுக்கோட்டை, ஜூன்: மரம் வளர்க்கும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு  அரசு பள்ளி ஆசிரியர் சுற்றுச்சூழலுக்கு வலிமை சேர்த்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி தென்றல் நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார்இவர் அரசு பள்ளி தாவரவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். பள்ளி நேரம் போக  மீதமுள்ள நேரத்தை  ஓய்வுக்காக ஒதுங்கி விடாமல்  தனது  வீட்டில் மரம் செடிகள் வளர்ப்பதில் கவனம் செலுத்தி பல்வேறு ரக மரச்செடிகளை வளர்த்தார்.  நாளடைவில் வீடே தோட்டமாக  மாறிப்போனது.

தாவரவியல் ஆசிரியராக இருப்பதால்  மரம் செடிகளை வளர்ப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் பற்றி கூடுதலாக  அறிந்து வைத்திருந்த காரணத்தால்  மரங்கள் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வை  அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும்  நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

தனது   வீட்டில் மரம் செடிகளை வளர்ப்பதை போல் கிராமங்களிலும் நகரப்புறங்களிலும்  மரம் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்  மக்களை மரம் வளர்ப்பில் ஈடுபடச்செய்ய வேண்டும் என்பதற்காக   அறந்தாங்கி ஆலங்குடி சாலையில் மேட்டுப்பட்டி அருகில் கேப்பரை என்னுமிடத்தில்  சிறிய அளவில்  மூலிகைச் செடிகள்  மலைப்பிரதேச மரவகைகள், ரோஜா மல்லிகை உள்ளிட்ட பூச்செடிகள், பலா ,கொய்யா, மாதுளை, நாவல், நெல்லிஅத்திஅதிமதுரம், மகிழம் போன்ற  பல்வேறு வகையான மரக்கன்றுகளையும் அரிய வகை மூலிகை  செடிகள்  மரக்கன்றுகள் உற்பத்தியை கடந்த ஆண்டு தொடங்கினார்.

பிற பகுதிகளில் இதுபோன்ற செடிகளை விற்பனை செய்யும் கடைகள் வணிக நோக்கில்  நிறைய முளைத்திருக்கின்றன. ஆனால் இவர்  கிராமப் பகுதிகளில் உள்ள   இளைஞர்கள், பெண்கள், சிறுவர்களிடம்  மரம் வளர்ப்பில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அவர்களது  இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள்  பிறந்தநாள் விழா  நினைவு நாள் விழா முன்னோர்கள் திதி போன்ற நாட்களில்  மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும்  பொது இடங்களில் பள்ளிகளில் கல்லூரிகளில் மரக்கன்று களை வளர்க்க வேண்டும்  என்பதை வலியுறுத்தி அதை நடைமுறை வழக்கமாக மாற்றி வருகிறார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றி வருவது மரங்கள்தான். இயற்கை வளங்களில்தான் வருங்கால  சந்ததிகளின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்பதை ஊருக்கு உணர்த்தி வருவது பாராட்டுக்குரியது.

Top