logo
46 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை:சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

46 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை:சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

19/Dec/2020 05:35:57

சென்னை, டிச: தமிழகத்தில் 46 ஆயிரம் இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி மாணவர்கள், மெஸ் ஊழியர்கள் என 191 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் கிண்டியில் உள்ள கிங்ஸ் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 28 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு குணமடைந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஐ.ஐ.டி. மாணவர்களை வழியனுப்பி வைத்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவரும் மற்ற மாணவர்களை முழுக்கவச உடை அணிந்து நலம் விசாரித்தார். அப்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன், கிங்ஸ் கொரோனா அரசு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 97 கல்லூரிகளில், 161 விடுதிகளில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கு தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

தொற்று குறைந்தது

ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி, ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரி விடுதிகள் மட்டும் அல்ல, வேலைக்கு செல்வோர் தங்கியிருக்கும் விடுதிகள் மற்றும் மேன்சன்களிலும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்களை கண்டிப்பாக அவர்களது வீடுகளுக்கு அனுப்ப மாட்டோம். அவர்கள் தனி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவார்கள். அங்கு ஐ.ஐ.டி. சார்பிலும், சுகாதாரத்துறை சார்பிலும் மருத்துவ கண்காணிப்பு குழுவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. குறிப்பாக மார்க்கெட் பகுதிகளில் தனி கவனம் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 2 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையிலும் 3.5 சதவீதத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. 2 வாரத்துக்கு முன்பு 0.86 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், இந்த வாரம் 1.1 சதவீதமாக உள்ளது. ஒரு சதவீதத்துக்கு கீழ் குறைப்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதிப்பை பொறுத்தவரை பெரம்பலூரில் தொற்று இல்லை

எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 10-க்கும் கீழ் உள்ளதோ, அவற்றை முற்றிலும் பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசியை மத்திய அரசு படிப்படியாகத்தான் வழங்கும். முதலில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர், முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

46 ஆயிரம் இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை நம்பி தற்போதே பொதுமக்கள் முக கவசங்களை அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Top