logo
 வாழ்க்கையை மாற்றும் நல்ல வழிகாட்டி புத்தகங்கள் மட்டும்தான்: வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன்

வாழ்க்கையை மாற்றும் நல்ல வழிகாட்டி புத்தகங்கள் மட்டும்தான்: வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன்

22/Apr/2021 11:25:18

புதுக்கோட்டை, ஏப்: வாழ்க்கையை மாற்றும் நல்ல வழிகாட்டி புத்தகங்கள் மட்டும்தான் என்றார் புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன்.

 புதுக்கோட்டை  அருகே மேலப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக புத்தக (ஏப்ரல் 23 ) நாள் விழாவையொட்டி வாசகர் பேரவை சார்பில் ரூ. 4000 மதிப்பி லான புத்தகங்களை வழங்கி மேலும் அவர் பேசியதாவது:                                                                                                                                               

 புத்தக வாசிப்பு வாழ்க்கையை சீராக்கும்; நெறிப்படுத்தும். மாபெரும் தலைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியது புத்தகங்கள்தான் என்று குறிப்பிடுகிறார்கள். மகாத்மா காந்தி  24 மணி நேர ரயில் பயணத்தில் தான் வாசித்த ரஸ்கினின் கடையனுக்கும் கடைத்தேற்றம்(Unto The Last) என்ற புத்தகம் தன்னுடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தது என்கிறார்.

டாக்டர் அப்துல் கலாம் தன்னுடைய வாழ்க்கையை நெறிப்படுத்தியவை லில்லியன் ஈஷ்லர் வாட்சன் எழுதிய லைட் ஃபிரம் மெனி லேம்ஸ்,திருக்குறள், அலெக்சிஸ் கேரல் எழுதிய  மேன் தி அன்னோன் ஆகிய  3 புத்தகங்கள்தான் என்கிறார். .

 வாழ்வில் உயர்நிலையை அடைய வேண்டுமென நினைக்கும் ஒவ்வொருவரும் நாள்தோறும் பாடப் புத்தகங்களோடு பிற நல்ல புத்தகங்களையும் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாட புத்தகங்கள் வேலைக்கு வழிகாட்டும். 8தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் வாழ்க்கைக்கு வழிகாட்டும். தொடர் வாசிப்பு உயர்ந்த நிலையை அடைய விளக்கேற்றும். தொடர் வாசிப்பிற்கு மாணவர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

புத்தகங்கள் மூன்று  தலைமுறைகளின் வீரியமான விழுமிங்களையும் வீழ்ந்த காலங்களை யும் எழுத்து வடிவில் கடத்தும் ஆவணங்கள். படித்துப் பாதுகாக்கப்படவேண்டிய காலப்பெட்ட கமாக விளங்கும் இவை, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு அல்ல; வரலாற்று நிகழ்வுக ளையும் இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்குக் கொண்டு செல்ல பதிவுசெய்யப்பட்ட பொக்கிஷங்கள்.


துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்பார் மார்ட்டின் லூதர்கிங். ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம். விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்து வைத்துள்ளன.

அறிவுசார் சொத்துகளான இவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ஆம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும்.  இந்நா ளை, 1995-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களையும் ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.


உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக் கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டா டப் படுகிறது. 

சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. புத்தகங்கள்தான் சான்றோர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கும் என்பதால், வாசிப்பை சுவாசமாகக் கருதி நேசிப்போம். மடைமைச் சுமைகளைச் சுட்டெரிப்போம் என்றும் பேசினார்.

 விழாவுக்கு, தலைமை ஆசிரியை ஆர். சீத்தாலெட்சுமி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்  என். சரவணன் வரவேற்றார். இடைநிலை ஆசிரியை ஆர். இந்திரா வாசகர் பேரவையுடன் இணைந்து புத்தகங்களை வழங்கினார்.  பட்டதாரி ஆசிரியர் வி .மகேஸ்வரன் நன்றி கூறினார். இதையொட்டி மாணவ மாணவிகள் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.


Top