logo
ஈரோட்டில்  பரிதவித்த  குடும்பத்துக்கு சொந்தச்செலவில் நிவாரண உதவி செய்த  காவல் உதவிஆய்வாளர்...

ஈரோட்டில் பரிதவித்த குடும்பத்துக்கு சொந்தச்செலவில் நிவாரண உதவி செய்த காவல் உதவிஆய்வாளர்...

15/Jun/2021 09:30:23

ஈரோடு, ஜூன்: ஈரோடு காவல்நிலையத்தில் உதவி கேட்ட பெண்ணுக்கு தனது சொந்தப் பொறுப்பில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நிவாரணப் பொருள்களை வழங்கினார். இவருக்கு  மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஈரோடு அக்ரஹாரம் அருகேயுள்ள நஞ்சப்பா நகரைச் சேர்ந்த சபீரா கடந்த பல ஆண்டுகளாக தினசரி அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வீட்டு வேலை செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்ததுடன் தனது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.

கொரோனா நோய்ப்பரவல் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நோய்ப்பரவல் அச்சம் காரணமாக வீடுகளில் அந்நிய நபர்களை அனுமதிக்க  இவர் வேலை பார்த்து வந்த வீட்டினர் மறுத்து வருகின்றனர்.

இதனால் சபீரா கடந்த 2 மாதங்களாக வீடுகளுக்கு சென்று பணியாற்ற முடியாததால் அவருக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டு. குடும்பச் செலவுகளை செய்ய முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் தனது குடும்பச் செலவுகளுக்காக அக்கம்பக்கத்தினரும் உதவிட முன்வரவில்லை.

இதனைத்தொடர்ந்து தனது இரண்டு குழந்தைகளுடன் கருங்கல்பாளையம் காவல்நிலையத்திற்கு சென்று தனக்கு உதவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதனையடுத்து காவல்நிலைய காவல் ஆய்வாளர் கோபிநாத் அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையையும், 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகளைக் கொண்ட தொகுப்புப் பைகளை வழங்கினார்.

காவல்நிலையத்திற்கு உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு உதவிய காவல் ஆய்வாளர் மனிதாபிமானச்செயலை  மாவட்டத்தினைச் சேர்ந்த காவல்துறையினர் பலரும்  பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Top