logo
உடல்நலத்தை கருத்தில் கொண்டு சசிகலா ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது: திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கருத்து

உடல்நலத்தை கருத்தில் கொண்டு சசிகலா ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது: திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கருத்து

12/Jun/2021 11:06:22

புதுக்கோட்டை, ஜூன்:  தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு சசிகலா ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது என்றார்  திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு சனிக்கிழமை வந்த அவர் மருந்துவமனை முதன்மையர் பூவதியிடம் முககவசம் வழங்கியபின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

மக்களுக்கு தடுப்பூசி மேல் இருந்த அச்சம் விலகி கொரோனா மீது அச்சம் வந்துள்ளதால் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இதனால் தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தமிழத முதல்வர் ஸ்டாலின் விரைவில் பிரதமர் மோடியை சந்திக்கும் நிலையில்  தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை கேட்டுப் பெறுவார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால்  மருத்துவமனையில் உள்ள 850 நோயாளிகளில் 160 பேர் மட்டுமே தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் காலியாகவுள்ள பேராசிரியர்கள் பணியிடத்தை விரைந்து நிரப்பிட  தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவேன்.

சசிகலா நிர்வாகிகளிடம் பேசும் ஆடியோ முக்கிய ஊடகத்தில் மட்டுமே வெளியாகிறது. அதை வைத்து மற்ற ஊடகங்கள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வு எடுத்துக் கொள்ளவது நல்லது.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை நிலையை எடுத்துள்ளதாகக்கூற முடியாது. திமுகவைப் பொறுத்தவரை ஒரே நிலையில்தான் இருக்கிறது. தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள நீட்தேர்வின் தாக்கம் தொடர்பாக அறிக்கை அளிக்க  ஓய்வு பெற்ற நீதிபதியைக்கொண்ட உயர்நிலைக்குழுவை அமைத்துள்ளது.

இந்தக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வு விவகாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துச்செல்லும்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  தமிழக அரசு எந்த வகையிலும் வழி விடாது என்றார் திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்.

இதில், நிர்வாகிகள் வி. முருகேசன், துரைதிவியநாதன், .எம்.எஸ். இப்ராஹிம்பாபு, குழ. முத்துகிருஷ்ணன், வழக்குரைஞர் என்.சி.ராதாகிருஷ்ணன், பென்னட் அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top