logo
தூர்வாரும் பணிகள், பாலம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகளுக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை

தூர்வாரும் பணிகள், பாலம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகளுக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை

11/Jun/2021 08:14:11

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காவும், தஞ்சையில் தூர் வாரும் பணிகளை பார்வையிடவும் முதல்வர் மு..ஸ்டாலின் இன்று(11.6.2021) திருச்சி  வருகிறார்.

மேட்டூர் அணை தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனால் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என கடந்த 3-ஆம் தேதி முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்தார்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம், அனைத்து பகுதி டெல்டா பாசன விவசாயிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் கொண்டு சேர்க்க இயலும். இதையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு..ஸ்டாலின் இன்று (ஜூன்11)  சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மேலகொண்டையம் பேட்டை, திருவளர்ச்சோலை வழியே கிளிக்கூடு செல்கிறார். அங்கு திருச்சி-தஞ்சை கல்லணை கொள்ளிடக்கரையில் ரூ.90.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1050 மீட்டர் நீளமுள்ள புதிய பாலத்தை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து அந்த புதிய பாலம் வழியே தஞ்சை மாவட்டம் பள்ளியக்ரஹாரம் சென்று வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். பின்னர் வல்லம் சென்று முதலைமுத்துவாரி, கொடிங்கால்வாய்க்காலில் நடைபெறும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.

பின்னர், மன்னார்புரம் சுற்றுலா மாளிகையில் ஓய்வுக்குப்பின் முதல்வர் மு..ஸ்டாலின் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று, மாலை 5.10 மணிக்கு தனி விமானம் மூலம் சேலம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

 இரவு முதல்வர் மு..ஸ்டாலின் அங்கு தங்குகிறார். நாளை(ஜூன்12) காலை 10 மணிக்கு மேட்டூர் செல்கிறார். மேட்டூர் அணையை ஆய்வு செய்யும் முதல்வர், காலை 10.45 மணிக்கு டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார்.

Top