logo
ஈரோடு மாவட்டத்தில் உள்ள  கொரோனா வைரஸ் சிகிச்சை தற்காலிக   மையங்களில் 2,792 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் முத்துசாமி  தகவல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை தற்காலிக மையங்களில் 2,792 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் முத்துசாமி தகவல்

04/Jun/2021 02:09:25

ஈரோடு, ஜூன்:   கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள  கொரோனா வைரஸ் சிகிச்சை தற்காலிக   மையங்களில் 2,792 படுக்கைகள் தயார் நிலையில் உள்ள என்றார் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு, கொரோனா பரிசோதனை (SWABTest)  பிரிவு, நோயாளிகளுடன் வருகை தரும் நபர்கள் காத்திருக்கும் அறைகள் மற்றும் கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டிடப் பணிகளை நேரில் பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர்  அமைச்சர் சு.முத்துசாமி  கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு பெருந்துறை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 932 எண்ணிக்கையிலான படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தற்பொழுது கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையான ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மாற்று பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன், ஈரோடு பெருந்துறை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் கூடுதலாக 200 படுக்கை வசதிகள் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு மருத்துவமனை வளாகத்திலே SWAB Test  எடுக்கும்; பரிசோதனை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளது வரை 61,408 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, இதில் 44,932 நபர்கள் குணமடைந்துள்ளனர். 16,087 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நாளது வரை 11,035 நபர்கள் (HomeIsolation)  வீட்டு தனிமையில் உள்ளனர்.

மேலும் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் 156 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது. இதில் 737 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 7,07,839 நபர்கள் கொரோனா பரிசோதனை(SwabCollection) மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் நாளது வரை 2,29,732 நபர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்;. இதில் 18 வயது முதல் 44 வயது வரை 41,677 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 932 படுக்கைகளும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 608 படுக்கைகளும் மற்றும் கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, அந்தியூர் அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை என 2,073 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

இதில் கொரோனா நோயாளிகளுக்கு 1691 படுக்கைள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆக்ஸிஜன் படுக்கைகளில் 998 நபர்களும், ஆக்ஸிஜன் அல்லாத படுக்கைகளில் 260 நபர்களும், தீவிர சிகிச்சை பிரிவில் (ICUPatients) 130 நபர்களும் என 1388 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதம் 303 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளது.

எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. தேவையான அளவு ஆக்ஸிஜன் வசதி மற்றும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்று அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக கொரோனா சிகிச்சை மையங்களில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கிருமிநாசினி, சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்வது ஆகியவற்றை பின்பற்றி, அரசின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அமைச்சர் முத்துசாமி.

Top