logo
 43 ஆண்டுகளுக்குப்பிறகு  இருபாலர் பள்ளியாக மாறிய புதுகை பிரஹதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி..!

43 ஆண்டுகளுக்குப்பிறகு இருபாலர் பள்ளியாக மாறிய புதுகை பிரஹதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி..!

25/Jun/2021 12:06:02

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டையில் நூற்றாண்டுகளைக்கடந்து இயங்கி வந்த  ஸ்ரீ பிரஹதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெண்களும் பயிலும் வகையில் இருபாலர் பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற  பெற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கை ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்குப்பின் இந்த கல்வி(2021-22) ஆண்டில் நிறைவேறியுள்ளது.

புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னரால் கடந்த 1857 -ஆம் ஆண்டு இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதிலிருந்து 1945 -ம் ஆண்டு வரை கல்லூரி மேலாண்மையின் கீழ் இயங்கி வந்தது. தொடர்ந்து, 2.2.1945 -இல் மன்னர் பிரஹதாம்பாள்தாஸ் ராஜகோபாலத்தொண்டைமான் என்பவர் ஸ்ரீ பிரஹதாம்பாள் அரசு உயர்நிலைப்பள்ளியை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து 30.7.1951 -இல் சென்னை மாகாணத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த ஜெ.எல்.பி. ரோச் விக்டோரியா என்பவர் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து 1978 -ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. இந்நிலையில்,  புதுக்கோட்டையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆண்கள் பள்ளியாக மிளிர்ந்தது. இங்கு படித்தவர்கள் உலகின் பல்வேறு நாடுகளிள் வசித்து வருகின்றனர் என்பதை எவரும் மறுக்க முடியாது.

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின் இப்பள்ளியின் மாணவர் சேர்க்கை 2 ஆயிரத்தையும் விஞ்சியது இப் பள்ளி். இதைத்தொடர்ந்து ஆண்டுகள் பல கடந்தன. கடந்த 2002 -ல் மாணவர்கள் சேர்க்கை  1800 ஆகவும், 2004 -ல் 1400 ஆகவும், 2010 -ல் 718 ஆகவும் படிப்படியாக குறைந்து இந்த ஆண்டில் சேர்க்கை 500 என்ற அதள பாதாளத்துக்குச் சென்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது என அறிவிப்புப் பலகை இப்பள்ளியில் வைக்கப்பட்ட நிலை மாறியது.

 இதற்கு காரணம் என்ன என்ற கேள்வி கல்வி்யாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நகரின் முக்கியப்பகுதியில் போக்குவரத்து வசதிக்கு குறைவில்லாத நிலையில் அமைந்துள்ள இப்பள்ளி நலிவுறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்நிலையை மாற்றுவதில் அனைவரும் ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இப்பள்ளி மூடப்படும் என்ற கவலை பெற்றோர்களிடம் மேலோங்கியது

இந்நிலையை சீரமைக்க உடனடியாக பெண்களும் பயிலும் வகையில் இருபாலர் பள்ளியாக மாற்ற வேண்டும். அப்போதுதான் இப்பள்ளியின் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வேறு வழியின்றி வெகு தொலைவில் உள்ள மகளிர் பள்ளிகளுக்குச் சென்று வரும் ஏறத்தாழ ஆயிரம் மாணவிகள் இங்கு சேரக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதன் மூலம் நூற்றாண்டை கடந்த பெருமையுடைய இப்பள்ளி தழைத்தோங்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்தச்சூழலில் 43 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது இந்த மேனிலைப்பள்ளி இருபாலர் பள்ளியாக மாற்றப்பட்டு மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது.

இது குறித்து அப்பகுதி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் . இப்ராஹிம்பாபு கூறியது:

புதுக்கோட்டையில் தற்போதுள்ள 3 மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் ஏறத்தாழ 8 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். மேலும், 4 இருபாலர் மேல்நிலைப்பள்ளிகளில் 5 ஆயிரம் பேர் மட்டுமே படித்து வருகின்றனர். பல மாணவிகள் இடம் கிடைக்காமல் வெளியூர்களுக்கும், அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள்  படிப்பை நிறுத்த வேண்டிய நிலையும் உருவாகியது.

 இந்நிலையில், இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இருபாலர் பள்ளியாக ஆக்க வேண்டுமென கடந்த 2010 -இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பள்ளி நிர்வாகத்தின் பரிந்துரையுடன் மாவட்ட கல்வி நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தக்கோரிக்கை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்

 

Top