logo
முழு ஊரடங்கு: ஈரோடு மாவட்டத்தில் கண்காணிப்புப்பணியில்1200 போலீசார்-தடையை மீறி சுற்றிய வாகனங்கள் பறிமுதல்

முழு ஊரடங்கு: ஈரோடு மாவட்டத்தில் கண்காணிப்புப்பணியில்1200 போலீசார்-தடையை மீறி சுற்றிய வாகனங்கள் பறிமுதல்

24/May/2021 11:00:36

ஈரோடு, மே: தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலானதைத்தொடர்ந்து  ஈரோடு மாவட்டத்தில் 1200 போலீஸார்  கண்காணிப் புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். .தடையை மீறி சுற்றிய வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும்  மே 24 முதல் வரும் 31-ஆம் வரை ஒரு வாரத்திற்கு தளர்வு இல்லாத முழு  ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதுஇந்த முழு ஊரடங்கின் போது தேவை இல்லாமல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என  ஈரோடு மாவட்ட  எஸ்பி  தங்கதுரை  எச்சரித்துள்ளார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறையாத காரணத்தால்இன்று (திங்கள்கிழமை) முதல் வருகிற 31-ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு தமிழக அரசால் எவ்வித தளர்வும் இன்றி முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், பால் வினியோகம், குடிநீர் வினியோகம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை தோட்டக்கலைத்துறை மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, வாகனங்கள் மூலம்  குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கொண்டு வந்து விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது. முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்காக ஈரோடு மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து சோதனை சாவடிகளிலும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களில் திருமணம், மருத்துவ சேவைக்கு மட்டும் -பதிவு பெற்றிருந்தால் அந்த வாகனங்கள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படும்.மேலும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பு, அத்தியாவசிய தேவைகள், முதியோர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் இதர பிரச்னைகள் குறித்து, ஈரோடு மாவட்ட காவல் துறை உதவி மையத்தில் 9655888100 மற்றும் 9655220100 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார் .

இந்நிலையில் திங்கள்கிழமை  காலையிலிருந்து ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வந்தனர். அப்படி இருந்தும்  காலையில் தடையை மீறி பொதுமக்கள்  சிலர்  இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் சுற்றி திரிந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி  அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வானங்களையும் பறிமுதல் செய்தனர்.

Top