logo
சிறு குறு நடுத்தர தொழிலையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டிய முதல்வருக்கு  கொமதேக நன்றி.

சிறு குறு நடுத்தர தொழிலையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டிய முதல்வருக்கு கொமதேக நன்றி.

13/May/2021 10:39:50

சென்னை, மே: சிறு குறு நடுத்தர தொழிலையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டிய முதல்வருக்கு  கொங்குநாடு மக்கள்தேசியக்கட்சி  நன்றி தெரிவித்துள்ளது.

 இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலரும் திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான .ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பரவலின் காரணமாக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தி இருக்கின்ற நிலையில் தமிழகத்தின் பொருளாதாரம் பாழ்பட்டுவிடக்கூடாது அதேநேரத்தில் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற புரிதலின் காரணமாக சிறு குறு தொழிலையும், அதை சார்ந்துள்ள தொழிலாளர்களையும் காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே தொழில் சார்ந்த அமைப்பினரை அழைத்து கருத்துகளை கேட்ட முதலமைச்சருடைய நடவடிக்கை தொழில் செய்கின்றவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தினால் என்ன பாதிப்பு வரும் என்பதை தொழில்துறையினர் சொன்ன உடனேயே தேவையான மீட்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு இருப்பது பாராட்டுக்குரியது.

இதுதான் தமிழக தொழில்துறையினருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. திருப்பூர் போன்ற ஒருசில பகுதிகளில் ஏற்றுமதி தொழிலுக்கு ஊரடங்கு இல்லையென்று அரசு அறிவித்திருந்தாலும் கொரோனா பரவலின் தாக்கத்தை கட்டுப்படுத் துவதற்காக தொழில்துறையினர் தாமாக முன்வந்து தொழிற்சாலைகளை மூட அறிவித்திருப்பது தங்களுடைய பொறுப்பையும், தொழிலாளர்களுடைய நலனையும் தொழில் செய்வோர் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

இப்படி கவனத்தோடு இருக்கின்ற தொழில்துறையினருக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கின்ற தமிழக முதலமைச்சருடைய செயல்பாடுகள் தொடரட்டும். தமிழகத்தில் இருந்து கொரோனாவை விரட்ட நாம் மக்கள் இயக்கமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சொன்னதை முதலமைச்சர் நிலைநாட்ட ஆரம்பித்திருக்கிறார்.

தொழில்துறையினரின் பிரச்சினைகளை தீர்த்தால்தான் பணிபுரிகின்ற சாதாரண மக்களை காப்பாற்ற முடியும் என்பதை தெளிவாக உணர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்ற தமிழக முதலமைச்சரை பாராட்டுகிறோம்.

Top