logo
புதுக்கோட்டை  மாவட்டத்தில் முழு முடக்கத்தால் மக்கள் நடமாட்டமின்றி முடங்கிப்போன சாலைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு முடக்கத்தால் மக்கள் நடமாட்டமின்றி முடங்கிப்போன சாலைகள்

10/May/2021 06:48:25

புதுக்கோட்டை, மே: முழு ஊரடங்கால் புதுக்கோட்டை  மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்கிடந்தன.

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இயல்பு நிலை திரும்பியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் வேகம் எடுக்கத் தொடங்கியது.

நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தினமும் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி  தினசரி கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் அமோக  வெற்றி  பெற்று 10  ஆண்டுகளுக்குப்பிறகு  திமுக ஆட்சியைப்பிடித்தது. தமிழக முதல்வராக திமுக தலைவர் மு,ஸ்டாலின் மே.7-ஆம் தேதி பொறுப்பேற்றார்

 இதையடுத்து தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே.10 -ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை  சில தளர்வுகளுடன் கூடிய முழு முடக்கத்தை தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்தார். இதன் மூலம் பேருந்துகள், டாக்சி, ஆட்டோ போன்ற வாகனங்கள் இயங்கத்தடை விதிக்கப்பட்டது.

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகளும்உணவகங்கள், மருந்துக்கடைகள், மருத்துவமனைகள்மருத்துவ ஆய்வகங்கள் தடையின்றி  இயங்கும் வகையில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

 புதுக்கோட்டை  மாவட்டத்தில் முழு முடக்கத்தையொட்டி பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன


புதுக்கோட்டை  மாநகரில் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் அண்ணாசிலை, மணிக்கூண்டு, பிருந்தாவனம், பழனியப்பா கார்னர், திருக்கோகர்ணம், புதுக்குளம், சாந்தநாதர் கோயில் வீதி, கீழ இரண்டாம் வீதி  போன்ற பகுதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கீழராஜவீதியில்  உள்ள ஜவுளி நிறுவனங்கள் வணிக வளாகங்கள்  பெரிய மார்க்கெட், உழவர் சந்தை, இறைச்சிக் கடைகள் ,மீன் கடைகள், ஆகியவை அடைக்கப்பட்டிருந்தன.


 புதுக்கோட்டை  மாவட்டத்தில்  பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆலங்குடி, வடகாடு, கீரனூர், இலுப்பூர், விராலிமலை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள்  அடைக்கப்பட்டிருந்தன

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 140 -க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பால் கடைகள், மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கின.

 

Top