logo
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பல அடுக்குப் பாதுகாப்பு வளையத்தில் நாளை தொடங்கும் வாக்கு எண்ணிக்கை..

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பல அடுக்குப் பாதுகாப்பு வளையத்தில் நாளை தொடங்கும் வாக்கு எண்ணிக்கை..

01/May/2021 11:10:51

புதுக்கோட்டை, மே 1: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத்தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் துணை ராணுவத்தினர் உள்ளிட்ட  பல அடுக்கு பாதுகாப்புடன் நாளை( ஞாயிற்றுக்கிழமை-மே.2) காலை   8 மணிக்கு தொடங்குகிறது. 

புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள கந்தர்வகோட்டை(தனி) புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டி ருந்த  1,902 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 -ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை அமைதியான முறையில் நடந்தது.   வாக்குப் பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான பெட்டிகளில் வைத்து புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. 

 இந்த மையத்துக்கு மூன்று  அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   அனைத்து தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சரியாக  நாளை காலை 8 மணிக்கு  தொடங்கவுள்ளது.  முன்னதாக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குபெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகளின் சீல்களை உடைத்து வாக்கு பெட்டிகளை எடுத்துவரப்படும். 

 முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை காலை 9 மணிக்கு வெளியாகும் என்று தெரிகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 14  மேஜைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு 14 மின்னணு வாக்கு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். ஒரு தொகுதிக்கு 17 நுண்பார்வை யாளர்கள் பணியில் உள்ளனர். 14 மேசைகளுக்கு  தலா ஒரு நுண்பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ள னர். 2 பேர் கூடுதல் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும்   அனைத்து மேசைகளையும்  தலா ஒரு வீடியோக காமிரா மூலம் கண்காணிப்பதுடன் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் சிசிடிவி கேமிரா மூலம் காவல்துறையினர் கண்காணிக்கின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியிலும், 2  -ஆவது அடுக்கில் ஆயுதப்படை போலீஸாரும், 3 -ஆவது அடுக்கில் உள்ளூர் போலீஸாரும் பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஒரு வேட்பாளருக்கு 15 சாதாரண முகவர் களும், ஒரு சிறப்பு முகவரும் அனுமதிக்கப்படுவர். 

 மின்தடையைச் சமாளிக்க அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் என 6 தொகுதியிலும் தலா ஒரு மத்திய அரசு அலுவலர்கள் நுண்பார்வையாளராக  பணியில் இருப்பார்கள்.

வழக்கமாக தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகே மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஆனால் இந்த முறை தபால் வாக்கு, மின்னணு எந்திரத் தில் பதிவான வாக்குகள் இரண்டுமே 8 மணிக்கு எண்ணப்படும். ஆனால் கடைசி சுற்று வாக்குகள் மின்னணு வாக்கு எந்திரத்தில் எண்ணப்படுவதற்கு முன் தபால் வாக்குகள் எண்ணப்பட்டிருக்க வேண்டும். 


இந்த நிலையில்,   வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரசு மகளிர் கல்லூரி யில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பி. உமா மகேஸ்வரி வெள்ளிக்கிழமை  நேரில் ஆய்வு செய்தார்.

 போக்குவரத்து மாற்றம்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அரசு மகளிர் கல்லூரி  வழியாக மாவட்ட ஆட்சியரகம்  செல்லும் சாலையின் இருபுறத்திலும் காலை முதல் போலீசார் தடுப்பு கட்டை அமைத்து தடுத்துவிட்டனர். இதனால் போக்குவரத்து மாற்றுப் பாதையில் மாற்றி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டாசு, மாலைக்கு கிராக்கி:   வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் வெற்றி பெறும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்  பட்டாசு  வெடித்து கொண்டாட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தபோதிலும், வெற்றி வேட்பாளர்களுக்கு  மாலை அணிவித்து வரவேற்கவும் கட்சி நிர்வாகிகள் முன்னேற்பாடுகளுடன் தயாராக உள்ளனர்.

டிவி உள்ள ஓட்டல் அறைகளை முன் பதிவு செய்துள்ள அரசியல் கட்சியினர்:  

வேட்பார்களின் உறவினர்கள், கட்சியினர் அதிகம் பேர் புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள முக்கிய தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை விவரத்தை உடனடியாக தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு கொண்டாட்டங்களை வெளிப்படுத்த டிவி வைக்கப்பட்டுள்ள அறைகளை கேட்டு பெற்றுள்ளனர். 

 


Top