logo
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் தொகுதி வாரியாக வேட்பாளர்கள், முகவர்கள், அரசு அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை

தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் தொகுதி வாரியாக வேட்பாளர்கள், முகவர்கள், அரசு அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை

29/Apr/2021 05:33:04

ஈரோடு, ஏப்: தேர்தல் ஆணையத்தின்  உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் வேட்பாளர்கள், முகவர்கள், அரசு அலுவலர்களுக்கு தொகுதி வாரியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

 தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 2741 வாக்குச்சாவடி மையங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. 8 சட்டமன்ற தொகுதியிலும் மொத்தம் 76.91 சதவீதம் வாக்கு பதிவானது.

ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, அந்தியூர், பெருந்துறை, பவானி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில்  பதிவான வாக்குகள்  சித்தோட்டில் உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியிலும், கோபி, பவானிசாகர் ஆகிய இரு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் வரும் மே இரண்டாம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக மாவட்டத்தில் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இந்த முறை வாக்கு எண்ணம் மையத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் ஓட்டுப்பதிவு நடைபெறும் மையங்கள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதன்படி 48 மணி நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட கொரோனா பாதிப்பில்லை என்ற பரிசோதனை சான்று அல்லது இரு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல் கமிஷன் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற 128 வேட்பாளர்கள் அவர்களின் முகவர்கள், மற்றும் ஓட்டு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ளஊழியர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


அதன்படி ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்கள் முகவர்கள், அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு  இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கு இந்த முகாம் தொடங்கியது அதிமுக, திமுக சுயேச்சை வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து முகவர்கள், அரசு பணியாளர்கள்  பரிசோதனை செய்யப்பட்டது. இதைப்போல் தொகுதி வாரியாக தனித்தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முடிவுகள் நாளைக்குள் தெரியவரும். இதில் பாதிப்பு இல்லாதவருக்கு ஓட்டு எண்ணும் மையத்திற்கு செல்வதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும்.பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

Top