logo
ஈரோடு பேருந்து  நிலையத்தில் பெரிய மார்க்கெட் பழக்கடைகள் செயல்படத் தொடங்கியது

ஈரோடு பேருந்து நிலையத்தில் பெரிய மார்க்கெட் பழக்கடைகள் செயல்படத் தொடங்கியது

15/May/2021 09:42:34

ஈரோடு, மே: ஈரோடு பேருந்து  நிலையத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட பெரிய மார்க்கெட் பழக்கடைகள் சனிக்கிழமை   செயல்படத் தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நேதாஜி பெரிய மார்க்கெட் ஈரோடு   . .சி .பூங்கா பகுதியில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரவு மொத்த வியாபாரமும், காலை சில்லரை வியாபாரமும் நடைபெற்று வந்தது.

இந்த மார்க்கெட்டில்  எப்போதும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள், ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்வதால் மார்க்கெட் பகுதி பரபரப்பாக காட்சி அளிக்கும். தற்போது கொரோனா தோற்று வேகமெடுத்து உள்ளதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முழு  ஊரடங்கு அமலில் இருப்பதால்  காலை 7 மணி வரை மட்டுமே காய்கறி வியாபாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மேலும்  தடுப்புகள் அமைக்கப்பட்டு மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து காய்கறி வாங்கி வந்தனர். இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட பழக்கடைகள் அங்கு செயல்பட்டு வருவதால் மக்கள் கூட்டம் மேலும் அதிகரித்து வந்தது. இதனை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சனிக்கிழமை  முதல் வஉசி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் ஈரோடு பேருந்து நிலையம் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன் பகுதியில் செயல்பட தொடங்கியது.

பேருந்து நிலையம் முன் பகுதியில்  பழக் கடைகள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப் பழங்களை அதிக அளவு வாங்கிச் சென்றனர். மக்கள் கூட்டம் தவிர்ப்பதற்காக இந்த மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் தெரிவித்தார். லாக்டவுன்  முடியும் வரை இங்கு பழக்கடைகள் காலை 10 மணி வரை செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.இதற்கு  பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Top