logo
ஈரோடு மாவட்டத்தில்  முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: ஆட்சியர் சி.கதிரவன் எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: ஆட்சியர் சி.கதிரவன் எச்சரிக்கை

08/Mar/2021 03:47:33

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில்  தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், நாளை முதல்  பொதுமக்கள்  கண்டிப்பாக  முக கவசம்  அணிந்துதான்  வெளியில் வரவேண்டும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், ஆட்சியர் சி. கதிரவன்.

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4779 வாக்குப்பதிவு எந்திரம், 3746 கட்டுப்பாட்டு கருவிகளும், 4088 விவிபேட் எந்திரங்களும் என மொத்தம் 12 ஆயிரத்து 613 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.  இதில் 11 ஆயிரத்து 495 எந்திரங்கள் எந்தவித பிரச்னையுமின்றி தயார் நிலையில் உள்ளது.  இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை அனைத்து தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 

ஈரோடு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் அங்கீகரித்த அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும்  பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,  ஆட்சியருமான சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் சுமுகமான முறையில் நடைபெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 951 இடங்களில் 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கூடுதலாக 527 வாக்குச்சாவடி மையங்கள் அடங்கும்.ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 50 ஆயிரத்து 62 பேர் உள்ளனர். 

மாற்றுத்திறனாளிகள் 14 ஆயிரத்து 98 பேர் உள்ளனர். இவர்களுக்கு நேரடியாக வீட்டிற்கு சென்று 12 டி படிவம் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் வரும் போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் உடன் வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 மீட்டர் தொலைவில் இரண்டு வாகனங்கள் மட்டுமேநிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி வரும் 21 -ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஏற்கெனவே வரும் 18-ஆம் தேதி முதல்கட்ட பயிற்சி நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. 

அந்த காலகட்டம் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் என்பதால்  வரும்  21 -ஆம் தேதி பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாக வந்து செலுத்தலாம். வாக்குச் சாவடிகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் ஏற்கெனவே  மாவட்டத்தில் 550 மூன்று சக்கர வாகனங்கள் உள்ளன தற்போது கூடுதலாக 450 மூன்று சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 92 துணை ராணுவத்தினர் வருகை தந்துள்ளனர். இவர்கள் வாக்குபதிவு அன்று பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

 மாவட்டத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் நாளை முதல் கண்டிப்பாக முக கவசம்  அணிந்து வரவேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் சமூக இடைவெளியையையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சி. கதிரவன்.


Top