logo
ஈரோட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு:ஆயுதப்படை போலீசார் மேலும் 2 பேருக்கு தொற்று

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு:ஆயுதப்படை போலீசார் மேலும் 2 பேருக்கு தொற்று

02/Feb/2021 03:50:41

ஈரோடு,  பிப்:ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.முன் களப்பணியாளர்களான டாக்டர், நர்சுகள், போலீசார், அரசு உயர் அதிகாரிகள், வயதானவர்கள் குழந்தைகள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கி வந்தது. மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

 இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் போலீசாருக்கு மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது.ஈரோடு தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து தெற்கு போக்குவரத்து அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு பூட்டப்பட்டன. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு திரும்பி வந்த ஈரோடு ஆணைகல்பாளையம் ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் மற்றும் உள்பட 4 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

  இதையடுத்து கொரோனாவால் போலீசாரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.இதையடுத்து முதற்கட்டமாக ஆயுதப் படையில் பணியாற்றும் 90-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் திங்கள்கிழமை இரவு வந்தது. இதில் ஆயுதப் படையில் பணியாற்றும் மேலும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த இரண்டு போலீசாரும் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வால் பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

 பாதிக்கப்பட்ட போலீசாரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் மீண்டும் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது  அச்சத்தைஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப் பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 361 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 23 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 25 ஆக உயர்ந்தது. கொரோனாவால் மாவட்டத்தில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் 186  பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் தொடர்ந்து அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 


                                                   


Top