25/Apr/2021 07:26:12
ஈரோடு, ஏப்:ஊரடங்கு உத்தரவை மீறி ஈரோட்டில் மோட்டார் பைக்குகளில் வெளியே சுற்றியவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முழு ஊடங்கின் போது அனாவசியமாக சாலையில் நடமாடினாலோ, வாகனங்களில் சுற்றினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்காக மாவட்ட மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், சென்னிமலை ரோடு, காளைமாடு சிலை, மணிக்கூண்டு பஸ் நிலைய பகுதி, கருங்கல்பாளையம் காவிரி கரை சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ஈரோடு ஜிஹெச் ரவுண்டானா பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதைப்போல் மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் ரோடுகளில் சர்வசாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தேவையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தனர். அவரைப் பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் ஒருசிலர் வானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.