logo
தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று: ஈரோடு அருகே தனியார் தீவன ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று: ஈரோடு அருகே தனியார் தீவன ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

19/Apr/2021 09:06:25

ஈரோடு,ஏப்: ஈரோடு அருகே உள்ள தனியார் தீவன ஆலையை உடனே மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் தீவன ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 700 -க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.இங்கு தயாரிக்கப்படும் தீவனமானது பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 69 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆலையை சுற்றியுள்ள சுமார் 300 -க்கும் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது இருப்பினும் தீவன ஆலை மூடாமல் இருப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் கடைக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் இதனையறிந்த  காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்பேச்சுவார்த்தையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஆலையை மூடாவிட்டால் திமுக சார்பில் போராட்டம்:

இதுகுறித்து மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் கூறியதாவது: கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்ட ஆலை இயங்கி வருகிறது. ஆனால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆலையை மூடாமல் கடைகளை அடைத்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே கடையை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் இல்லை என்றால் நாளை திமுக சார்பில் முன்னனி தலைவர்கள், திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Top