logo
ஈரோடு மாவட்டத்தில்  ஜன.8-இல்  ஐந்து  இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

ஈரோடு மாவட்டத்தில் ஜன.8-இல் ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

07/Jan/2021 10:32:38

ஈரோடு, ஜன: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்தியாவில் இன்னும் சில நாட்களில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்காக கோவிஷூல்டு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதைப்போல்  கோவேக்சின்  தடுப்பூசியும் அடுத்த கட்டமாக பயன்பாட்டிற்கு வர உள்ளது. 

தமிழகத்தில் முதல் கட்டமாக கோவிஷூல்டு தடுப்பூசி மருத்துவர்கள் செவிலியர்கள் பாராமெடிக்கல் ஊழியர்கள் மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் என 6 லட்சம் முன் களப் பணியாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா  தடுப்பூசி போடுவதற்காக ஒத்திகை தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தி பார்க்கப்பட்டது.

ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் தற்போது அனைத்து மாவட்டங் களிலும் தடுப்பூசி  ஒத்திகை நடத்த சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, ஈரோடு மாவட்டத்தில்  வெள்ளிக்கிழமை 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள்  துணை இயக்குனர்  சவுண்டம்மாள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் என கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, சிறுவள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையம், ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள சுகாதார மையம் என 5  இடங்களில்கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒத்திகையின் போது தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்கள் காத்திருக்கும் அறை அவருக்கு உடல்நிலை பரிசோதனை தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் பெயர் பதிவு செய்து கொள்ளப்படும்.

பின்னர் அவர்களின் செல்போனுக்கு தகவல் செல்லும். அதில் எந்த இடத்தில் எந்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படும். ஒரு தடுப்பூசி போட்டு முடிந்தவுடன் அடுத்து டோஸ் பற்றிய தகவலும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

தடுப்பூசி செலுத்திய பின் அவர் காத்திருப்பு அறையில் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். அப்போது அவர்களது உடல்நிலை மாற்றங்கள் குறித்து கண்காணிக்கப்படும்.ஒரு நபருக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ஆகும் நேரம் ஆகியவற்றை  கணக்கிடல்  போன்றவை ஒத்திகையாக நடத்தப்படும் என்றார். 

Top