logo
கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் தவறான புரிதல் வந்துவிடக்கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் தவறான புரிதல் வந்துவிடக்கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

17/Apr/2021 11:54:33

புதுக்கோட்டை, ஏப்: கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் தவறான புரிதல் வந்துவிடக்கூடாது என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  6  சட்டமன்றத் தொகுதிகளில்  நடைபெற்ற வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வாக்கு எண்ணும் மையமான   புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை 6  தொகுதிகளைச் சேர்ந்த  அதிமுக வேட்பாளர்கள் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சனிக்கிழமை வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்தனர்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறியதாவது: வாக்கு எண்ணும் மையங்களில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு பெட்டிகளை சிசிடிவி கேமரா மூலமாக  கண்காணிப்பதை  நாங்கள்  பார்வையிட்டோம்.மிகவும் பாதுகாப்பாக அவைகள் வைக்கப் பட்டுள்ளன.

சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவருக்கு கொரோனா ஊசி போடப்பட்டது குறித்து தவறாகப் புரிந்து கொள்ளத்தேவையில்லை. தமிழகத்தில் கொரோனா தாக்கம் மிகவும் அதிகரித்து வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி எடுத்துக்கொண்டால் இறப்பிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ளலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கொரோனா தடுப்பு பணிகளை என்னால் செய்ய இயலவில்லை. இருப்பினும் இன்று காலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடன்  தொடர்பு கொண்டு தமிழகத்தின் நிலை குறித்து எடுத்துக் கூறினேன்.மேலும் தமிழகத்திற்கு கூடுத லாக ரெம்டெவிசர் மருந்து கூடுதலாக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின்போதே சுகாதாரத்துறையில் வலுவான கட்டமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்காரணமாக எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர் கள் தயாராகிவிட்டனர்.

பொதுமக்கள் தற்போதைய சூழ்நிலையை அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டாம். அவ்வாறு இருந்தால் வரும் காலங்களில் தமிழகம் மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும். பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Top