logo
ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் கொரோனா பரிசோதனை மையம்   தொடங்கியது

ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடங்கியது

16/Apr/2021 08:17:08

ஈரோடு, ஏப்:ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் கொரோனா பரிசோதனை மையம் மீண்டும் இயங்கத்  தொடங்கியது

 ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் பாதித்தவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது வரை மாவட்டத்தில் 802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே தொற்றால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை யளிக்க சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனா பாதித்த நபர்களின் ஆரோக்கியத்தை கவனித்து அவர்களை வீட்டில் தனிமைப் படுத்தி சிகிச்சைக்கு உட்படுத்துவதா , மையங்களில் சேர்ப்பதா  என்பதை கண்டறிய ஈரோடு , பெருந்துறை அரசு மருத்துவமனைகள், ஈரோடு மாநகராட்சி மண்டபம், கோபி கலை அறிவியல் கல்லூரி, பவானி மொடக்குறிச்சி ஆகிய 6 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மண்டபத்தில்  கொரோனா ஸ்கிரீனிங் சென்டர் செயல்படத் தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் தினமும் 40 முதல் 45 பேர்  தொற்றால்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள்  மாநகராட்சி மண்டபத்திலுள்ள ஸ்கிரீனிங் சென்டருக்கு  அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை , நுரையீரல் என ஐந்து வகையான பரிசோத னைகள் செய்யப்படுகிறது. இதில் தொற்றின்  தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது:-

தற்போது ஈரோடு மாநகராட்சி பகுதியில் தினமும் 40 முதல் 45 பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மண்டபத்தில் நேற்று முதல் கொரோனா  ஸ்கிரீனிங் சென்டர் செயல்பட தொடங்கியுள்ளது. இங்கு கொரோனா பாதித்த நபர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு ஐந்து வகையான பரிசோதனைகள் செய்யப்ப டுகிறது. இதில் அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாமா என்று ஆலோசித்து  சம்பந்தப்பட்ட நபர்கள் வீடுகளுக்கு சென்று சுகாதார துறையினர் ஆய்வு செய்கிறார்கள்.

இந்த ஆய்வில் அரசு அறிவித்துள்ள வசதிகள் இருந்தால் அவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வீடுகளில் வசதிகள் இல்லை என்றால் அவர்களுக்கு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.

ஆஸ்பத்திரிகளில் தங்கி  சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மாநகராட்சி பகுதியில் பெரும்பாலும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அந்தந்த பகுதி சுகாதாரதுறையினர், செவிலியர்கள் கண்காணித்து தேவையான சிகிச்சைகள் மற்றும்  வசதியை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Top