logo
புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள  42 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன போராட்டம்

புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள 42 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன போராட்டம்

10/Apr/2021 05:46:56

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை நகராட்சிப்பகுதியில் நிலவும் குடிநீர்த்தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் எதிரே சனிக்கிழமை  நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மாவட்டத் தலைநகரானபுதுக்கோட்டை நகராட்சிப்பகுதியில்  சுமார் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இம்மாவட்ட மக்களின் குடிநீர்த்தேவையை நிறைவேற்றும் வகையில் சுமார் ரூ. 24 கோடி மதிப்பில் திருச்சி ஜீயபுரத்திலிருந்து கடந்த 1989 --ஆம் ஆண்டில் காவிரி கூட்டுக்குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் முதல் கட்டமாக புதுக்கோட்டை நகர மக்களுக்கு தினமும் சுமார் 60 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் கிடைத்து வந்தது.

ஆண்டுகள் பல கடந்தபின் மக்கள் தொகை பெருக்கமும்  குடிநீர் இணைப்புகளும்  அதிகரித்ததன் காரணமாக  ஒரு நாள் விட்டு ஒரு நாள் என விநியோக முறை மாறியது, அதைத் தொடர்ந்து  3 நாளுக்கு ஒரு முறை என்ற நிலைக்கு சென்றது. இந்நிலையில், தற்போது பல பகுதிகளில் வாரம் ஒரு முறைதான் குடிநீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக  மிகவும் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

நகராட்சி நிர்வாகம் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச்செயலர் நியாஸ்அகமது தலைமையில்  புதுக்கோட்டை நகராட்சி முன்பாக ஒரு கையில் சாப்பாடு மற்றொரு கையில் குடிநீருக்காக கொட்டாங்குச்சி ஆகியவற்றை கையில் ஏந்தியபடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், நகராட்சி நிர்வாகம்  போர்க்கால அடிப்படையில்  குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி  முழக்கங்கள்  எழுப்பப்பட்டன.

இது குறித்து தகவலறிந்த நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் குடிநீர்த்தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து  அனைவரும் கலைந்து சென்றனர். 


Top