logo
வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

04/Apr/2021 08:22:42

புதுக்கோட்டை, ஏப்:  சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து  தேர்தல் பார்வையாளர்கள் ஜி.ரகு, டாக்டர் கே.எச்.கோவிந்தராஜ்,  மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பி.உமாமகேஸ்வரி, தேர்தல் காவல் பார்வையாளர் மட்டா ரவி கிரன் ஆகியோர்  நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தனர்.

பின்னர், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி கூறியதாவது: சட்டமன்ற பொதுத்தேர்தல்  ஏப்ரல் 6 -இல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட உள்ளது. அந்த வகையில் இவ்வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.

சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் வகையில் பாதுகாப்பு வைப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது. 

வாக்கு எண்ணும் நாளன்று சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கும் வகையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேசைகள், நாற்காலி அமைத்தல், தடுப்பு கட்டைகள் அமைத்தல், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், வேட்பாளர்கள், முகவர்கள் அமரும் இடம், வாக்குப்பதிவு எண்ணிக்கை விவரங்கள் அறிவிக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும். 

இதேபோன்று குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன்,  நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள்  உடனிருந்தனர்.

Top