logo
ஈரோட்டில் மேம்பாலம், ஜவுளி வளாகம், தரமான சாலைகள் ஏற்படுத்தப்படும்: ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் யுவராஜா வாக்குறுதி

ஈரோட்டில் மேம்பாலம், ஜவுளி வளாகம், தரமான சாலைகள் ஏற்படுத்தப்படும்: ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் யுவராஜா வாக்குறுதி

29/Mar/2021 11:46:44

ஈரோடு, மார்ச்: ஈரோட்டில்  தேவையான இடங்களில் மேம்பாலம், ஜவுளி வளாகம், தரமான சாலைகள் ஏற்படுத்தப்படும் என்றார் ஈரோடு கிழக்கு  தமாகா வேட்பாளர்  எம்.யுவராஜா.

 ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பொதுமக்கள்,  பேருந்து  பயணிகளிடம் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகா வேட்பாளர்  எம்.யுவராஜா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து ஓட்டு சேகரித்தார்.

அங்கு, வேட்பாளர் எம்.யுவராஜா பேசியதாவது:  அதிமுகவுடன் பாஜக – பாமக – தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கூட்டணி சார்பில், இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால், இப்பகுதி மக்களுக்கான சேவையை தொடர்வேன்.

ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் மூலம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு விரைவாக வழங்கி, குடிநீர் தட்டுப்பாடு இல்லாத தொகுதியாக மாற்றுவேன். பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும். அத்துடன் சாலைகள் இனி தோண்டப்படாத வகையில், மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும். 


ஈரோடு கிழக்கு தொகுதிக்குள், அரசின் ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் கொண்டு வரப்படும். அனைத்து வீதிகளிலும் இரவை பகலாக்கும் வகையிலான தெருவிளக்குகள் அமைக்கப்படும். ஜவுளி வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் தரும்படி, ஜவுளி வணிக வளாகம் அமைக்கப்படும். ஜவுளி சார்ந்த தொழில்கள் அழிந்துவிடாமல் காக்க, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு தகுந்தார்போல உருவாக்கப்படும்.

காளிங்கராயன் வாய்க்காலில் கழிவு கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டின் அடையாளமான காளிங்கராயன் வாய்க்கால் பாதுகாக்கப்படும். ஈரோடு மாநகரின் அனைத்து பகுதியை இணைக்கும் வகையில் சர்குலர் சாலை வசதி ஏற்படுத்தப்படும். அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள், தேவையான இடங்களில் மேம்பாலம், ரவுண்டானா ஏற்படுத்தப்படும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து காவலர், தன்னார்வலர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும். அடிப்படை வசதிகள் இல்லாத பகுதியை கண்டறிந்து, குடிநீர், மின்சாரம், சாலை வசதி, பொது சுகாதார வளாகம் ஏற்படுத்தப்படும். அருசின் அனைத்து நலத்திட்டங்களும் ஒரு குடும்பத்தினர் கூட விடுபடாமல் இருக்க வார்டுகள், பகுதிகள் வாரியாக எம்.எல்.ஏ நேரடி பார்வையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் எளிதில் சந்திக்கும் வகையில் எம்.எல்.ஏ.  அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும். ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் பிரமாண்டமான முறையில் ஏற்படுத்தப்படும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில், பாதுகாப்புடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கப்படும். 

காவிரி கரையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடவும், இறுதி சடங்குக்காக வருவோர் அச்சமின்றி ஆற்றில் இறங்கும் வகையில் பாதுகாப்பான படித்துறை அமைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவாக நிறைவேற்றப்படும். அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் நடக்கும்போது, சம்மந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து பணியாற்றி, மக்களுக்கு இடையூறு இன்றி வேலைகள் முடிக்கப்படும். ஈரோடு முதல் திண்டல் வரை மேம்பாலம் கட்டும் பணி விரைவாக நிறைவேற்றி, ஈரோடு நகர போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம் வகுக்கப்படும். மேட்டூர் சாலையில் அரசு மருத்துவமனை மேம்பாலம் முதல், பஸ் ஸ்டாண்ட் வரை மேம்பாலம் அமைக்கப்படும்.

 மாணவர்களுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் 2 ஜி.பி., விலையில்லா டேட்டா இனி வருடம் முழுவதும் வழங்கப்படும். மஞ்சள், வெங்காயம், மரவள்ளி கிழங்கு, அரிசி, கரும்பு, வாழை, சிறுதானியங்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்கப்படும். அனைவருக்கும் இலவச அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுவராஜா பேசினார்.

இதில், ஈரோடு கிழக்கு  தொகதி எம்.எல்.ஏ.கே.எஸ். தென்னரசு, த.மா.கா பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஆறுமுகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Top