logo
ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸார்  தபால் மூலம் வாக்களிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸார் தபால் மூலம் வாக்களிப்பு

02/Apr/2021 08:43:42

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் போலீஸார்  தபால் மூலம் வாக்களித்து  ஜனநாயகக்கடமை ஆற்றினர்.


 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை  உறுதி செய்யும் வகையில், வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் தங்களது தபால் மூலம் வாக்களிக்கலாம்என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 


அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடந்த தபால்  வாக்குப்பதிவில்  5 ஆயிரத்து 176 பேர்  தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் 4,598 பேர் இதுவரை தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிய போலீசாருக்கு தபால் ஓட்டு மூலம் வாக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் 2330 போலீசார் தபால் மூலம்  வாக்களிக்க  விருப்பம் தெரிவித்திருந்தனர்.

 அதன்படி வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் நான்கு இடங்களில் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதன்படி ஈரோட்டில் பன்னீர் செல்வம்  பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பவானியில் கடையம் பட்டியில் உள்ள கே எம் பி மஹாலிலும் கோபியில் மொடச்சூர் ரோட்டில் உள்ள கே எம் எஸ் திருமண மண்டபத்திலும் பெருந்துறையில் பழைய பஸ் நிலையம் அருகே கொங்கு மெட்ரிக் குலேஷன் பள்ளியில் போலீசாருக்கான தபால் வாக்களிக்கும் நிகழ்வு நடந்தது. 

காலை 10 மணி முதலே போலீஸார் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போலீசார் தங்கள் தபால் வாக்குகளை செலுத்தினர். மாலை 5 மணி வரை தபால் வாக்குப்பதிவு நடந்தது. 

Top