logo
ஈரோடு திண்டல் ஜீவா நகரில் குண்டும் குழியுமான சாலையைசீரமைக்கும் பணிகள் தீவிரம்

ஈரோடு திண்டல் ஜீவா நகரில் குண்டும் குழியுமான சாலையைசீரமைக்கும் பணிகள் தீவிரம்

25/Nov/2020 06:30:55

(ஊடகங்களில் வெளியான செய்திகள் எதிரொலி)

ஈரோடு: ஈரோடு திண்டலில் இருந்து ரிங் சாலை செல்லும் சாலையாக  ஜீவா நகர் சாலை இருந்து வருகிறது. சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் இந்த சாலையை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலை வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 

குறிப்பாக திண்டல் பகுதியிலிருந்து ரிங் சாலைக்கும் அங்கிருந்து திண்டலுக்கும் ஏராளமான வாகனங்கள் வருகின்றன. இரவு நேரங்களிலும் குடியிருப்பு பகுதி மக்கள் வேலைக்கு சென்று வரும் பெண்கள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்கிறார்கள். ஆனால் தற்போது இந்த பகுதியில் உள்ள சாலை குண்டு குழியுமாக காட்சி அளித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலை பின்னர் தார் போடப்படாமல் உள்ளது.


அண்மையில்  பெய்த மழையால் ரோட்டில் ஆங்காங்கே நீர் தேங்கியது. இதனால், இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறிக் கீழே விழும் சம்பவம் தொடர்கிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்நிலையில், நேற்று அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாநகராட்சி சார்பில் குண்டும் குழியுமான ரோட்டை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் குண்டும் குழியுமான சாலையில்  மணலை நிரப்பி சமப்படுத்தினர். சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். 


Top