logo
ஈரோடு அருகே கோயிலுக்கு தீர்த்தக் குடம் எடுத்துச்சென்ற பக்தர்களின்  கூட்டத்திற்குள்  கார் புகுந்து  விபத்து-3 பேர் பலி

ஈரோடு அருகே கோயிலுக்கு தீர்த்தக் குடம் எடுத்துச்சென்ற பக்தர்களின் கூட்டத்திற்குள் கார் புகுந்து விபத்து-3 பேர் பலி

01/Apr/2021 01:36:59

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அடுத்த கொளாங்காட்டுவலசு பகுதியில் மாகாளியம்மன் கோயிலுக்கு தீர்த்தக் குடம் எடுத்துச்சென்ற பக்தர்களின்  கூட்டத்திற்குள்  கார் புகுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

 இந்த கோவிலில் ஆண்டுதோறும்  சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக கோயில் திருவிழா எளிய முறையில் நடந்தது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு 11.30  மணி அளவில் நடந்தது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மக்கள் ஈரோடு-பழனி பிரதான  சாலையில்   தீர்த்தக்குடம் எடுத்து வந்து கொண்டிருந்தனர்.  

அப்போது ஈரோட்டிலிருந்து அரச்சலூர் நோக்கி வேகமாக  வந்த காரை  அவல்பூந்துறை, காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (32) என்பவர் ஓட்டி வந்தார். காரில் அவரது மனைவி சமீம் பாத்திமா (26), அவரது மகன்கள் ஆஜித் (8), சுஜித் (1) ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்த்தக் குடம் எடுத்து வந்தவர்களின்  கூட்டத்திற்குள்  புகுந்தது.  தறிகெட்டு ஓடிய கார் அங்கிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை  இடித்துத்தள்ளிவிட்டு அருகில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி நின்றது.


இந்த விபத்தில் வடக்கு வெள்ளியம்பாளையம், அரிஜன காலனியைச் சேர்ந்த ஆறுமுகம்(40)என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள்(45) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி(42), கணபதி, அம்மணி, மகேஸ்வரி, ரஞ்சித், பொன்னுசாமி, விஸ்வநாதன், ராமசாமி, சேகர்,முருகன், கார்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காருக்குள் இருந்த யுவராஜ் ,அவரது மனைவி இரண்டு மகன்கள் ஆகியோருக்கு  லேசான காயம் ஏற்பட்டது. 

இந்த விபத்து குறித்து தகவலறிந்ச  அரச்சலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதேபோன்று 108 ஆம்புலன்ஸ் வாகனமும்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியிலேயே பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள்  எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து ஈரோடு அரசு  மருத்துவ மனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் புதன்கிழமைநேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும் விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினரின் உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

Top