logo
கொரோனா கட்டுப்பாடு காரணமாக பண்ணாரி அம்மன்கோயில் திருவிழாவில் தலைமை பூசாரி‌ உட்பட 10 பேர் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக பண்ணாரி அம்மன்கோயில் திருவிழாவில் தலைமை பூசாரி‌ உட்பட 10 பேர் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி.

30/Mar/2021 11:44:59

ஈரோடு, மார்ச்:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவில்  கொரோனா கட்டுப்பாடு காரணமாக தலைமை பூசாரி‌ உட்பட 10 பேர் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக பண்ணாரி அம்மன் கோயில்  குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டது.‌ இதனையடுத்து பண்ணாரி அம்மன் கோயிலில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறும் எனவும் இதில் 3 பூசாரி உட்பட்ட 10 பேர் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி எனவும் பொதுமக்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை எனவும் அறநிலைதுறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில்  அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உலக பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் காணிக்கை யாக அளிக்கப்பட்ட மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது. பின்னர் அதிகாலை 4 மணி அளவில் தாரை தப்பட்டைகள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்திற்கு அழைத்து வந்தனர். 

குண்டத்தை சுற்றி கற்பூரம் ஏற்றியும் பூக்களைத் தூவியும் பூஜைகள் செய்யப்பட்டு தலைமை பூசாரி ராஜேந்திரன் உட்பட 10 பேர் குண்டம் இறங்கினார்கள். இந்த ஆண்டு குண்டம் இறங்க பொதுமக்கள் யாருக்கும் அனுமதிக்கப்படாத நிலையில் பண்ணாரி அம்மனை தரிசிக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பல வருடங்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் குண்டம் திருவிழாவில் பொதுமக்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி அளிக்கப்படாதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

Top